August 7, 2021 தண்டோரா குழு
கல்வி உதவி தொகை பெறும்ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களிடம் கல்வி கட்டணம் செலுத்த வற்புறுத்தக்கூடாது என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் கூறியிருப்பதாவது:
சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள், சட்ட கல்லூரிகள், பாலிடெக்னி கல்லூரிகள், பொறியியல், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் மற்றும் இதர சுயநிதி கல்லூரிகளில் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பாடப்பிரிவுகளுக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் இன மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களித்து அரசால் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கல்விக் கட்டண சலுகை பெறும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் இன மாணவ, மாணவியர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இம்மாணவர்கள் முதலாம் ஆண்டு கல்லூரி சேர்க்கையின் போது கல்வி உதவி தொகை பெறுவதற்கான சாதி, வருமானம், ஆதார் அட்டை நகல், மாணக்கரின் பெயரில் துவக்கப்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்களுடன் அந்தந்த கல்லூரிகளில் உதவி மையத்தினை அணுகி அவர்களது உதவியுடன் சான்றுகளை நேரிடையாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கல்வி உதவி தொகை பெற்று பயனடைய தெரிவிக்கப்படுகிறது.
கல்லூரி நிர்வாகத்தினர் இந்த மாணாக்கர்களின் கல்லூரி சேர்க்கையின் போது கல்லூரி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய கட்டாய மற்றும் திருப்பியளிக்கப்படாத கட்டணங்களை அவர்களிடம் வசூல் செய்யக்கூடாது. அரசிடம் இருந்து மாணவர்களின் கல்வி கட்டணம் வழங்கப்படும் வரை அவர்களது கல்வி கட்டணத்தை செலுத்த வற்புறுத்தக்கூடாது.
அவ்வாறு வசூல் செய்யும் கல்லூரி நிர்வாகத்தினர் மீது பாதிக்கப்பட்ட மாணவர்கள் கலெக்டர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஆகியோரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தொலைபேசி வாய்லாகவோ (0422-2303778) புகார்களை தெரிவிக்கலாம். அவ்வாறு பெறப்படும் புகார் குறித்து சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு கூறியுள்ளார்.