February 23, 2017 தண்டோரா குழு
ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று கழகத்தைக் காப்போம், கழக அரசை நிலை நிறுத்தி மக்கள் பணியாற்றுவோம் என சபதம் ஏற்போம் என்று அதிமுக பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா ,அ.தி.மு.க தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
பிப்ரவரி 24-ம் தேதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69 வது பிறந்த நாள் விழா அனுசரிக்கப்படவுள்ளது. இதனை அடுத்து அ.தி.மு.க தொண்டர்களுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா சிறையில் இருந்தவாறு வியாழக்கிழமை கடிதம் எழுதி உள்ளார்.
அதில் அவர் எழுதியிருப்பதாவது;
“ ஜெயலலிதா தமிழக மக்களுக்காக நிறைவேற்ற நினைத்திருந்த திட்டங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றி, மக்கள் வாழ்வில் ஒளியேற்றி, எல்லோருக்கும் எல்லாமுமாய்த் திகழ்ந்த ஜெயலலிதாவின் புகழ் நிலைத் திருக்கும் வண்ணம் தமிழக அரசு செயல் பட வேண்டும்.
ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாள் தினத்தன்று ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குங்கள். இயன்ற இடங்களில் எல்லாம் அறுசுவை உணவுகளை அன்னதானமாகச் செய்யுங்கள். கழகத்தின் கொடிகள் பட்டொளி வீசிப்பறக்கட்டும். ஜெயலலிதாவின் திரு உருவப் படங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைத்து மலர் அஞ்சலி செலுத்துங்கள்.
கடந்த காலங்களில் ஒவ்வொரு பொதுக்குழுவிலும் ஜெயலலிதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி நாம் அனைவரும் மகிழ்ந்தோம். இந்த ஆண்டு அவர் நினைவோடு அவரது உருவப் படத்தின் முன் நின்று கழகத்தைக் காப்போம், கழக அரசை நிலை நிறுத்தி மக்கள் பணியாற்றுவோம், உங்கள் ஆன்மா என்றென்றும் எங்களுக்குத் துணை நிற்கட்டும், என்று சபதம் ஏற்போம்”.
இவ்வாறு சசிகலா எழுதியுள்ளார்.