December 16, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி 26வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி கோவை மாநகர போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணனிடம் மனு ஒன்று அளித்துள்ளார். அதில், பீளமேடு ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள காந்திமாநகர், வி.கே.ரோடு, கருப்பண்ண கவுண்டர் லேஅவுட், ஹட்கோ காலனி, விளாங்குறிச்சி சாலை ஆகிய பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இப்பகுதி மக்கள் காலை மற்றும் மாலை வேலைகளில் போக்குவரத்து நெரிசலால் மேம்பாலத்தை கடந்து செல்ல கடும் சீரமம் அடைந்து வருகின்றனர்.இதுதவிர ஹட்கோ காலனி, வி.கே. ரோடு ஆகிய பகுதிகளில் சாலையின் இருபுறமும் 24 மணி நேரமும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதன் காரணமாகவும் இப்பகுதி மக்கள் சாலையில் நடந்து செல்லவே முடியாத நிலை உள்ளது.
மேம்பாலத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய காலை மற்றும் மாலை வேலைகளில் போக்குவரத்து போலீசார் பணி அமர்த்தப்பட வேண்டும். சாலையை அக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் அப்புறப்படுத்த வேண்டும் எனக்கூறப்பட்டிருந்தது.இதனை பெற்றுக்கொண்ட போக்குவரத்து துணை கமிஷனர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு போக்குவரத்து போலீசாரை அப்பகுதியில் பணிக்கு அமர்த்தியுள்ளார்.இதனால் போக்குவரத்து நெரிசல் குறைந்து அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.