March 25, 2022 தண்டோரா குழு
உலக காசநோய் தினத்தையொட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாஸ்ட் சென்டர் என்ற அமைப்பை மாவட்ட காசநோய் ஒழிப்புக் கழக தலைவரும் மற்றும் மாவட்ட ஆட்சியருமான சமீரன் துவங்கி வைத்தார்.
கோவையை முற்றிலும் காசநோய் இல்லாத மாவட்டமாக மாற்றும் முயற்சியில் காசநோய்க்கான தொற்று, செயல்பாடுகள், செயல்படுத்துவதற்கான சவால்கள் தனியார் துறைகளில் அதிகமாக உள்ளது. மேலும் ‘யூனைட் டூ எண்ட் – டிபி – கோவை’யை செயல்படுத்த தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவத் துறைகளுடன் கூட்டு முயற்சிகளை மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து தனியார் மருத்துவமனைகளும் மருத்துவமனையில் கண்டறியப்படும் காசநோயாளிகளின் விபரங்களை அரசு துறைக்கு தெரிவிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தனியார் மருத்துவ மனைகளில் கண்டறியப்படும் காசநோயாளிகளின் விபரங்கள், அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் மற்றும் சிகிச்சை காலம் முழுவதும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை ‘பாஸ்ட் சென்டர்’ அமைப்பின் நியமிக்கப்பட்ட தனிஅலுவலர் மூலமாக பதிவு செய்யப்பட்டு கண்காணிக்க தேவையான அனைத்து நடைமுறைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
2020ம் ஆண்டும் 2 ஆயிரத்து 127 நோயாளிகள் அரசு மருத்துவமனையிலும், 1,369 நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளிலும், 2021ம் ஆண்டு 2 ஆயிரத்து 538 நோயாளிகள் அரசு மருத்துவமனையிலும், 1,355 நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளிலும் கண்டறியப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில் காசநோயை முற்றிலும் ஒழிக்கும் அரசின் சீரிய முயற்சியாக தனியார் மருத்துவமனைகளில் காசநோய் கண்டறியப்பட்டு அதன் தகவல்களை முழுமையாக அரசுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் இணை இயக்குநர் (மருத்துவம்) சந்திரா, துணை இயக்குநர் (சுகாதாரம் மற்றும் ஊரக நலப்பணிகள்) அருணா, துணை இயக்குநர் மருத்துவ பணிகள் (குடும்ப நலம்) கௌரி, துணை இயக்குநர் மருத்துவ பணிகள்(காசநோய்) சக்திவேல் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.