August 5, 2017 தண்டோரா குழு
புனே ரயில் நிலையத்தில் காணாமல்போன 4 வயது சிறுமியை அவரது பெற்றோர்கள் 16 மாதங்களுக்கு பின் கண்டுபிடித்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரை சேர்ந்த தனிஷ்கா கம்ப்ளே என்னும் 4 வயது சிறுமி கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் தேதி தனது பாட்டியுடன் கோல்ஹாபூர் நகரிலிருந்து புனே நகருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது புனே ரயில் நிலையத்தில் இறங்கிய சிறுமி காணாமல் போய்விட்டாள். இது குறித்து அவளுடைய பெற்றோர் ரயில் நிலைய காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரை ஏற்றுக்கொண்டு விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவை சோதனை செய்தபோது, தனிஷ்காவை அடையாள தெரியாத நபர் கொண்டு செல்வது பதிவாகி இருந்து. அதை வைத்துக்கொண்டு தனிஷ்காவை கண்டுப்பிடிக்க முயன்று வந்தனர்.
இதற்கிடையில்,சம்பவம் நடந்து 4 மாதங்களுக்கு பிறகு, தனிஷ்காவை மீண்டும் புனே ரயில் நிலையத்தில் கண்டுபிடித்துள்ளனர். உடனே அவளை Society of Friends of Sassoon Hospital (SOFOSH)என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் Central Adoption Resource Authority (CARA)என்னும் அரசு நிறுவனம் மூலம் தனிஷ்காவை குழந்தை இல்லாத மற்றொரு தம்பதினருக்கு தர முடிவு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து புனே காவல்துறையினர், அவளுடைய பெற்றோரை கண்டுபிடித்து தகவல் தந்துள்ளனர். சுமார் 16 மாதங்களாக காணாமல்போன மகள் பத்திரமாக இருப்பதை அறிந்து, அவளை பார்க்க SOFOSH நிறுவனத்திற்கு வந்துள்ளனர். தனிஷ்கா தான் அவர்களுடைய மகள் என்பதை சரிபார்த்து விட்டு, அவளை அவளுடைய பெற்றோருடன் அனுப்பியுள்ளனர்.
“மற்றொரு பெற்றோருடன் அனுப்ப முடிவுசெய்த நிலையில், அவளுடைய சொந்த பெற்றோருடன் அனுப்பி வைத்தது, மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.