August 17, 2017 தண்டோரா குழு
கனடாவில் 13 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன நிச்சயதார்த்த மோதிரம் வீட்டுத் தோட்டத்தில் உள்ள கேரட்டில் கிடைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
கனடா நாட்டின் அல்பேர்டா நகரில் வசிக்கும் மேரி கிராம்ஸ் என்னும் 84 வயது மூதாட்டி, கடந்த 2004-ம் ஆண்டு, தனது வீட்டிலுள்ள காய்கறி தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, கையிலிருந்த நிச்சயதார்த்த மோதிரம் காணாமல் போய்விட்டது. அதை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதனிடையே தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த மேரியின் மருமகள், ஒரு கேரட்டில் நடு பகுதியில் மோதிரம் சிக்கியுள்ளதை கண்டுபிடித்தார்.
“என்னுடைய கையிலிருந்த மோதிரம் காணாமல் போய்விட்டது. அதை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அதனால், ஒரு நகை கடை வியாபாரியிடம் சென்று, வேறு ஒரு மோதிரத்தை வாங்கி வந்தேன். கேரட்டில் மோதிரம் வந்துள்ளது என்று என் மருமகள் கூறியபோது, அவள் விளையாட்டாக சொல்கிறாள் என்று நினைத்தேன்.
ஆனால், அந்த மோதிரத்தை என்னுடைய பேத்தி என்னிடம் காட்டியபோது, காணாமல் போன மோதிரத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். என்னுடைய கணவர் உயிரோடு இருந்திருந்தால், என்னுடைய மகிழ்ச்சியில் பங்கெடுத்து கொண்டிருப்பர். அவர் 5 ஆண்டுகள் முன் இறந்துவிட்டார்” என்று மேரி கிராம்ஸ் தெரிவித்தார்.
மோதிரம் காணாமல் போய், மண்ணில் புதைந்து பின் கேரட் வளரும் போது அதில் சிக்கியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் முதல் முறை அல்ல. கடந்த 2016-ம் ஆண்டு, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவருடைய திருமண மோதிரம் தோட்டத்தில் காணாமல் போனது. அந்த மோதிரம் 3 ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு கேரட்டில் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.