September 15, 2022 தண்டோரா குழு
காப்பர் விலையெற்றம் தொடர்பாக தனியார் தொழில் நிறுவன தலைவரும், மனு நீதி அறக்கட்டளை தலைவருமான மனு நீதி மாணிக்கம் உள்ளிட்ட தொழில் நிறுவன நிர்வாகிகள் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது மனு நீதி மாணிக்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தொழில் வீழ்ச்சியடையாமல் இருக்கவும், அதன் வளர்ச்சிக்கும் நிலையான மூலப்பொருள் விலை அவசியம். 2018ம் ஆண்டு நாம் காப்பர் ஏற்றுமதி செய்து கொண்டிருந்தோம். ஆனால் தற்பொழுது சுமார் 6 லட்சம் டன் இறக்குமதி செய்கிறோம். 2018-ம் ஆண்டு காப்பரின் விலை கிலோவிற்கு ரூ.300 ஆக இருந்தது.ஆனால் தற்போது ரூ.750ஐ தாண்டிவிட்டது.சர்வதேச சந்தையில் காப்பரின் தற்போதைய விலை ரூ.300 தான்.
நம் நாட்டில் காப்பரின் விலை உயர்வால் காப்பரை உபயோகித்து செய்யப்படும் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் ஏற்றுமதி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.இதன் இழப்பின் மதிப்பு வருடத்திற்கு சுமார் 60 ஆயிரம் கோடியாகும். இந்நிலையில் அதே பொருட்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் போது மலிவான விலையில் கிடைக்கிறது.
இதனால் நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் எம்.எஸ்.எம்.இ. என சொல்லப்படுகிற சிறு,குறு தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பாதிப்பின் காரணமாக சுமார் ஒரு கோடி தொழிலாளர்கள் வேலையில்லாமல் உள்ளனர். வேலைவாய்ப்பு வாய்ப்பு இல்லாமல் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
கோவையில் மட்டும் சுமார் 3 ஆயிரம் தொழிற்சாலைகள் காப்பரின் விலை உயர்வால் பாதித்துள்ளது.
இதன் காரணமாக ஒரு லட்சம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பு இல்லை.கோவையில் வெட் கிரைண்டர், பம்ப்செட், எலக்ட்ரிக்பொருட்கள், மோட்டார், ஜெனரேட்டர் போன்ற தொழிற்சாலைகளில் காப்பர் பெரிய அளவில் தேவைப்படுகிறது.வருடத்திற்கு சுமார் 1 லட்சம் டன் காப்பர் தமிழகத்தில் உபயோகிக்கிறோம். இதில் கோவையில் மட்டும் சுமார் 50 ஆயிரம் தேவைப்படுகிறது. காப்பரின் தேவை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.
காற்றாலை, சூரிய ஒளி மின்சார உற்பத்தி போன்ற தொழில்கள் பெரிய அளவில் பெருகி வருகிறது. இனி வரும் காலங்களில் மின்சார வாகனம் மிக அதிக அளவில் உற்பத்தி ஆக உள்ளது. இதற்கு காப்பர் மிக மிக அவசியம்.நமது பாதுகாப்பு துறை மிக அதிக அளவில் தளவாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய உள்ளது. இதற்கும் காப்பர் அவசியம்.
ஒரு காப்பர் தொழிற்சாலை ஆரம்பித்து அதில் உற்பத்தி தொடங்க சுமார் 4 வருடம் ஆகும். இதை கருத்தில் கொண்டு உடனடியாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லாவிதமான மாசுக்கும்தீர்வு கண்டுபிடித்துள்ளோம். மூலப்பொருள் உற்பத்தி செய்யும் எந்த தொழிலும் நிற்காமல் பாதுகாக்க வேண்டும். மாசுக்கு தீர்வு உள்ளதால் உற்பத்தி பாதிக்காதவாறு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில மற்றும் மத்திய அரசாங்கம் அல்லது தனியார் கூட்டமைப்பினர் மூலப்பொருட்களை உற்பத்தி செய்ய முன்வரவேண்டும். சர்வதேச விலையில் நம் நாட்டு தொழிற்சாலைக்கு காப்பரை கொடுக்க வேண்டும்.காப்பருக்கு உண்டான தாது பொருள் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் அதிகம் கிடைக்கிறது. நம் நாட்டில் மிக சொற்ப அளவில் மட்டுமே உள்ளது. ஆகவே நாம் தாது பொருளை இறக்குமதி செய்கிறோம். ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகள் தமிழகம் அருகாமையில் உள்ளதால் காப்பர் தொழிற்சாலையை தமிழகத்தின் துறைமுகம் உள்ள இடங்களில் அமைக்கலாம்.
4 லட்சம் டன் உற்பத்தி திறன் கொண்ட ஆலை அமைக்க சுமார் ரூ.4 ஆயிரம் கோடி ஆகும். அல்லது மடகாஸ்கர் போன்ற நாடுகளில் தொழிற்சாலை அமைத்து காப்பரை இறக்குமதி செய்யலாம். அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சம்பந்தப்பட்ட அனைத்து தொழில் நுட்பங்களும் நம் நாட்டிலேயே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.