May 19, 2017 தண்டோரா குழு
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குபதிவு செய்துள்ளனர்.
காங்கிரஸ் ஆட்சியின் போது மத்திய நிதித்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். 2014ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜ அரசு பொறுப்பேற்றது. அதன்பின், ப.சிதம்பரம் அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
கடந்த மாதம் அந்நிய செலாவணி மோசடி புகார் தொடர்பாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் ஐ.என்.எஸ்., மீடியா’ என்ற, ‘டிவி’ நிறுவனத்திற்கு, வெளிநாடுகளில் இருந்து, 305 கோடி ரூபாய் முதலீடு கிடைத்தது. இதை, 4.62 கோடி ரூபாயாக குறைத்துக் காட்ட, 2007ல், உதவி செய்ததாக, , ப.சிதம்பரத்தின் மற்றும் அவரது மகன், கார்த்தி சிதம்பரம் மீது புகார் எழுந்தது.
இதுக்குறித்து, கார்த்தி சிதம்பரம் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. அதைத்தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன், சென்னையில் உள்ள அவரது வீடு உட்பட, நாடு முழுவதும், 16 இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதற்கிடையில்,கடந்த 2015 டிசம்பரில், கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில், வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை தொடர்பாக, மத்திய அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
இதுதொடர்பாக, அவர் மீது மேலும், நான்கு வழக்குகள் பதிவு செய்ய, சி.பி.ஐ.,க்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியானது . இந்நிலையில், லண்டன் சென்றுள்ள கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.