January 7, 2025 தண்டோரா குழு
கோவை சுங்கம் பகுதியில் உள்ள கார்மல் கார்டன் பள்ளியின் வைர விழா கொண்டாட்ட நிகழ்வு வரும் ஜனவரி 10 மற்றும் 11-ம் தேதி கோவை சுங்கம் பகுதியில் உள்ள கார்மல் கார்டன் பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட உள்ளது.
இதுகுறித்து பள்ளியின் தாளாளரும் முதல்வருமான அருள் தந்தை ஆரோக்கிய தடயூஸ் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் டி. நந்தகுமார் ஆகியோர் கூறியதாவது :-
கடந்த 1964-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதியில் அப்போதைய கோவை ரோமன் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் மேதகு பிரான்சிஸ் சவரிமுத்து அவர்களால் ஆண்களுக்கான முதல் பதின்ம பள்ளியாக கோவை மாவட்டத்தில் துவக்கப்பட்டது தான் கார்மல் கார்டன் மெட்ரிகுலேஷன் ஹயர் செகண்டரி ஸ்கூல்.இப்பள்ளி 1966-ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டது.
1969 மற்றும் 70-ம் ஆண்டு பழைய முறைகளின் படி 11-ம் வகுப்பு தொடங்கப்பட்டு 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுத்தந்தது. 1978-ம் ஆண்டு இப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டது. 1980-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் குழுவே 100 சதவீத தேர்ச்சியை பெற்று சாதனை படைத்தது.1981-ம் ஆண்டு கார்மல் மழலையர் பள்ளி துவக்கப்பட்டது.
இப்பள்ளி 1989 – 1990-ம் வருடம் வெள்ளிவிழா கொண்டாடடியது.இதன் தொடர்ச்சியாக 2014 – 2015-ம் ஆண்டு பொன்விழா கொண்டாடியது.தற்போது 2024 – 2025-ம் ஆண்டு வைர விழா கொண்டாடப்பட உள்ளது.இப்பள்ளியின் ஆசிரியர்கள் குழு பல்வேறு வெற்றிகளை தொடர்ச்சியாக பெற்றுக் கொடுத்தது. இப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு அரசு விதிகளின் படி ஓய்வு ஊதியம் வழங்கப்பட்டு வருகின்றது என்பது பெருமைக்குரிய விசயமாகும்.
இப்பள்ளியில் இதுவரை சுமார் 10,000-ற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்று இன்று உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ளார்கள். இங்கு பயின்ற மாணவ மாணவியர்கள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல அரசு துறை, தனியார் நிறுவனங்களில் முன்னணி பணியிலும் உள்ளார்கள். மேலும் பல்வேறு அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளிலும் உள்ளனர்.
இந்த வைர விழா ஆண்டில் எங்கள் பள்ளியில் படித்த 12 முன்னாள் மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு “ஜெம் ஆப் கார்மல்” என்ற உயரிய விருதும் வழங்கப்பட உள்ளது. மேலும் வைர விழா நிகழ்வின் ஒருபகுதியாக இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் அருள் தந்தை முடியப்பர் ஆடிட்டோரியத்திற்கு முழுவதும் குளிர்சாதன வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.
வரும் ஜனவரி 10-ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறும் வைர விழா கொண்டாட்ட துவக்க நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக இப்பள்ளியின் தலைவரும் கோயம்புத்தூர் பிஷப்புமான டாக்டர் எல். தாமஸ் அக்வினாஸ் கலந்து கொண்டு விழா நிகழ்ச்சிகளை துவக்கி வைக்கிறார். கௌரவ விருந்தினர்களாக கோயம்புத்தூர் விகார் ஜென்ரல் எஸ். ஜான் ஜோசப், கார்மல் கார்டன் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப்பள்ளியின் முன்னாள் தாளாளர் மற்றும் முதல்வர்கள், ஸ்விட்சர்லாந்து, ஜெனிவா, உலக சுகாதார அமைப்பின் முக்கிய பொறுப்பில் உள்ள எமது பள்ளியின் முன்னாள் மாணவர் டாக்டர் மாதவா ராம் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்கின்றார்கள்.
மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் திரு டி நந்தகுமார், செயலாளர் திரு டி ராஜ்குமார் ஆகியோர்களும் கலந்து கொள்கிறார்கள்.11-ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறும் வைர விழா கொண்டாட்ட நிறைவு விழாவிற்கு சென்னை, பள்ளி கல்வி துறை, இயக்குனர், டாக்டர் எஸ். கண்ணப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
மேலும் கௌரவ விருந்தினராக முதன்மை கல்வி அதிகாரி, ஆர். பாலமுரளி மற்றும் மாவட்ட தனியார் பள்ளி கல்வி அதிகாரி ஏ. புனிதா அந்தோணியம்மாள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது முன்னாள் ஆசிரியர்கள் ஜோ தனராஜ், சாதானந்தம் மற்றும் மைக்கேல் சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.