November 22, 2022
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் என்ற திட்டத்தின் கீழ் காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்ட காவல் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் காவல்துறையினருடன் ஒரு நாள் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி தலைமையில், கோவை மாவட்ட போலீஸ் எஸ்பி பத்ரி நாராயணன் முன்னிலையில் காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 30 மாணவிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் பிஆர்எஸ் வளாகத்திற்கு சென்று பல்வேறு நிகழ்வுகளில் இறந்த காவலர்களுக்கான நினைவு தூண்களை பார்வையிட்டனர். அதன் பின்னர் கோவை மாவட்ட ஆயுதப்படையில் அமைந்துள்ள ஆயுதக் கிடங்கில் உள்ள காவலர்கள் பயன்படுத்தும் வெவ்வேறு வகையான துப்பாக்கிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை பார்வையிட்டும், அதனை எவ்வாறு கையாள்வது பற்றியும் தெரிந்து கொண்டு அதனை கையாண்டனர்.
அதனைத் தொடர்ந்து கோவை ரைபில் கிளப்-ஐ பார்வையிட்டனர். அங்கு துப்பாக்கிகளின் வகை மற்றும் அவற்றிற்க்கு இடையிலான வித்தியாசம் பற்றி மாணவியருக்கு உயர் அதிகாரிகள் எடுத்துக்கூறினார்கள்.மாணவியருக்கு போலீசாரின் பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன் மூலம் அவர்களை மனதளவில் வலுப்படுத்தி பாலியல் குற்றங்கள் இல்லாத மாவட்டமாக கோவை மாவட்டத்தை உருவாக்குவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
மேலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடந்து நடத்துவதற்கு கோவை மாவட்ட காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.