March 1, 2017 தண்டோரா குழு
மேற்கு வங்க மாநில காவல்துறை அதிகாரி செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 28) தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்தார்.
பர்த்வான் மாவட்டம், சலன்பூர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் சித்தார்த்த கோசல். தனது அறையில் பணிக்காக வைத்திருந்த துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தார். அது தற்கொலை என்று போலீசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வெளியிட்ட அறிக்கையில்,
“சம்பவத்தின்போது சித்தார்த் கோசல் பணிக்கு வந்து தனது அறையில் இருந்தார். சிறிது நேரத்தில் திடீரென்று துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. மற்ற காவலர்கள் விரைந்து சென்று பார்த்தபோது, கோசல் நாற்காலியில் அமர்ந்தபடி கிடந்தார். அவரது மார்பில் துப்பாக்கித் தோட்டா பாய்ந்து ரத்தம் வெளியேறியதைப் பார்த்ததும் பதறிய அவர்கள் கோசலை அவசரமாக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் இறந்துவிட்டார். அவர் பணிக்கு காலை 1௦ மணிக்கு வந்துள்ளார். வந்த சில நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நெஞ்சில் துப்பாக்கிக் குண்டடிப்பட்ட காயத்துடன் நாற்காலில் அமர்ந்திருந்த கோசலைக் கண்டோம். உடனே அவரை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தோம். மாலை 4 மணியளவில் உயிரிழந்துவிட்டார் என்று அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பிரேதப் பரிசோதனைக்காக அவருடைய உடல் கொண்டு செல்லப்பட்டது. எந்த காரணத்திற்காகத் தற்கொலை செய்துக்கொண்டார் என்று விசாரணை மேற்கொண்டுள்ளோம்” என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.