December 9, 2016 தண்டோரா குழு
காவிரி வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் இல்லை என்ற மத்திய அரசின் வாதத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. வழக்கை விசாரிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கே உள்ளது எனவும் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி காவிரி நடுவர்மன்றம் 1990-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. காவிரியிலிருந்து கர்நாடக மாநிலம் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக இந்த மன்றம் உத்தரவிடவேண்டும்.
காவிரி நீரை கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு 2007-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி வெளியானது. அதன்படி 250 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்குத் திறந்துவிட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. ஆனால், கார்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடவில்லை.
இதை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததன. அந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. அப்போது நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்த மனுக்களை விசாரிப்பதற்கான உரிமை உச்ச நீதிமன்றத்துக்கு உள்ளதா என விவாதிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து மத்திய அரசு தனது நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பித்தது. அதில் நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு இணையானது. எனவே காவிரி விவகாரத்தில் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பே இறுதியானது என சுட்டிக் காட்டியிருந்தது.
இந்நிலையில் மத்திய அரசின் வாதத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது. காவிரி வழக்குகள் மீதான விசாரணை டிசம்பர் 15-ம் தேதி பிற்பகலில் நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. அதுவரை தமிழகத்துக்கு 2000 கன அடி நீர் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. மறு உத்தரவு வரும் வரையில், கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு நீடிக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.