August 28, 2023 தண்டோரா குழு
காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் லட்சங்களில் லாபம் தரும் மரப் பயிர் சாகுபடி கருத்தரங்குகள் தமிழ்நாட்டில் நேற்று (ஆக.27) ஒரே நாளில் 6 இடங்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப் பணியால் மரம்சார்ந்த விவசாயத்திற்கு மாறும் ஆர்வம் தமிழக விவசாயிகளிடம் பெரிதும் அதிகரித்துள்ளது. இதற்கேற்ப அதிகப்படியான கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புகளை நடத்தும் தேவையும் அதிகரித்துள்ளது.
இதன்காரணமாக, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஈரோடு, திண்டுக்கல், திருநெல்வேலி என தமிழ்நாட்டின் வெவ்வேறு திசைகளில் ஒரே நாளில் 6 கருத்தரங்குகள் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இக்கருத்தரங்குகளில் ஒட்டுமொத்தமாக 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனர்.
விவசாயிகள் நேரடி அனுபவத்தை பெறும் விதமாக இக்கருத்தரங்குகள் முன்னோடி விவசாயிகளின் தோட்டங்களிலேயே நடத்தப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த முன்னோடி மர விவசாயிகளும், வல்லுனர்களும் பங்கேற்று மரப் பயிர் விவசாயத்தை லாபகரமாக செய்வதற்கு தேவையான தொழில்நுட்ப விஷயங்களை மற்ற விவசாயிகளுக்கு கற்றுக்கொடுத்தனர்.
குறிப்பாக, அடிப்படை அம்சங்களான மண் மற்றும் நீரின் தன்மை, மண்ணுக்கேற்ற மரங்களை தேர்வு செய்வது, மரம் நடும் வழிமுறைகள், மர விவசாய மாதிரிகள், ஊடுப்பயிர் சாகுபடி, நீர் மேலாண்மை, களை மேலாண்மை, கவாத்து மற்றும் பராமரிப்பு நுட்பங்கள் என பல தரப்பட்ட விஷயங்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், மரம் நடுவது குறித்த செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.
இதில் பங்கேற்ற விவசாயிகள் பலர் தங்கள் மாவட்டத்திற்கு அருகிலேயே இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டது மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்தனர்.
கருத்தரங்கு மற்றும் பயிற்சி வகுப்புகள் மட்டுமின்றி விவசாயிகளுக்கு தேவையான டிம்பர் மரக்கன்றுகளை மிக குறைந்த விலையில் வழங்கும் பணியையும் இவ்வியக்கம் மேற்கொண்டுள்ளது.
மேலும், இந்தாண்டு 1.1 கோடி மரக்கன்றுகளை விவசாய நிலங்களில் நடுவதை இலக்காக நிர்ணயித்துள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 50 இடங்களில் ஈஷா நர்சரிகள் செயல்படுகின்றன. இங்கு 19 வகையான டிம்பர் மரக்கன்றுகள், ஒரு கன்று – ரூ.3 என்ற மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.