May 23, 2017
தண்டோரா குழு
சர்வதேச சமாதானத்தை ஊக்குவிப்பதற்காகவும் மற்றும் ஆயுதப் போட்டியை முறியடிக்க வேண்டும் என்னும் நோக்கத்தை வலியுறுத்துவதற்காகவும் மிக நீளமான ஸ்கார்ப் ஒன்று பின்னப்பட்டு, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
சென்னையிலுள்ள “Mother of India Crochet Queens” (MICQ) நிறுவனம் 14.09 கிலோமீட்டர் தூரத்திற்கு உலகிலேயே மிக பெரிய ஸ்கார்ப்(scarf) தயாரித்தது.
நாடெங்கிலிருந்தும் சுமார் 7௦௦ பெண்கள் மற்றும் துபாய், ஹாங்காங், போலாந்து, மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளை சேர்ந்த பெண்களின் கூட்டு முயற்சியால் இது சாத்தியமானது. சென்னையின் மேடவாக்கத்திலுள்ள கிளப் ஹவுஸ் என்னும் இடத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இதை செய்ய தொடங்கினர்.
அவர்கள் பின்னிய அந்த ஸ்கார்ப் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் இருந்தது.இதுமாதிரியான ஸ்கார்ப் பின்னப்பட்டு கின்னஸ் உலக சாதனை அடைந்தது இதுவே முதல் முறையாகும் என்று கின்னஸ் உலக சாதனை பதிப்பாளரான ரிஷி நாத் கூறினார்.
மதர் ஆப் இந்தியா குரோசெட் குவீன்ஸ்(MICQ) நிறுவனத்தின் பொருட்கள் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர்,மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு, மற்றும் ஐநாவின் முக்கிய உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படும்.
“Mother of India Crochet Queens” (MICQ) நிறுவனர் சுபஸ்ரீ நடராஜன் கூறுகையில்,
“எந்தவொரு நிதி அல்லது ஆதாரமும் இல்லாமல் நாங்கள் செய்த வேலைகளைக் காட்டியதன் மூலம் ஒற்றுமைக்கான ஒரு செய்தியை அனுப்ப நாங்கள் விரும்பினோம். எங்களுடைய நோக்கத்தில் நம்பிக்கைக்கொண்ட பெண்கள் தாங்களாகவே எங்களுடன் சேர்ந்து பணிபுரிந்தனர்” என்றார்.