June 15, 2017 தண்டோரா குழு
கோவை கணியூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடி கட்டணத்தைத் தவிர்க்க கிராமங்கள் வழியாக செல்லும் சிறிய மற்றும் கனரக வாகனங்களால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவையிலிருந்து சேலம் வழியாக கார்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் பாலக்காடு வழியாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்ல முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக “என்எச் 47” உள்ளது. மத்திய அரசாங்கத்தின் தங்க நாற்கரச் சாலை திட்டத்தின் கிழ் பத்து ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டு, கடந்த ஓராண்டுக்கு முன் இச்சாலையை ஆறு வழி சாலையாக மாற்றப்பட்டது.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூரில் சுங்கச் சாவடி கட்டண மையம் அமைக்கப்பட்டது. அதில் காருக்கு ரூ. 85 , பேருந்துக்கு ரூ 260 , கனரக வாகனங்களுக்கு ரூ.395 , ரூ.515 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுங்கச் சாவடிக்கு அருகே உள்ள கிராமங்களில் வசித்து வருவோர் அடையாளச் சான்றிதழ் காட்டி, சலுகைக் கட்டணத்தில் பயணிக்கலாம்.
சுங்கச் சாவடி கட்டணத்தைத் தவிர்க்க வாகணங்கள் கணியூர் அருகே வரும் போது அருகில் உள்ள கிராமங்களான தென்னம்பாளையம், சோமனூர், சின்னியம்பாளையம், மோரிப்பாளையம், முதலிபாளையம் வழியாகச் செல்கின்றன. கிராம சாலைகள் மிகவும் குறுகலாகவும், நெடுஞ்சாலைகளை விட தரம் குறைந்ததாகவும் உள்ள காரணத்தினால் சேதம் அடைக்கின்றன. கனரக வாகனங்கள் வேகமாக செல்வதால் சாலை வழியாக தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்களும், சாலையில் இரு சக்கர வாகனத்தின் பயணிப்போர் விபத்துகளில் சிக்குவதும் அதிக அளவில் ஏற்படுகின்றன என கிராமவாசிகள் புகார்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பூ. கார்த்திக் கூறுகையில், “சுங்கச் சாவடி கட்டணம் காரணமாக வாகனங்கள் கிராமங்கள் வழியாகச் செல்வதால் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. கிராமப்புறச் சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்லாமல் தடுக்க தடுப்புகள் வைக்கப்படுகின்றன. ஆனாலும், அதனை மீறி வாகனங்கள் உள்ளே வந்து செல்கின்றன” என்றார்.
காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை அதிக அளவில் அப்பகுதிகளில் செல்வதால் பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்வோர், கூலி வேலைக்குச் செல்வோர் என அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து பெயர் சொல்ல விரும்பாத போக்குவரத்துக் காவலர் ஒருவர் கூறுகையில், “கனரக வாகனங்கள் கிராமப்புற சாலை வழியாகச் செல்வதை மட்டுமே தடுக்க முடியும். சிறிய ரக வாகனங்கள் செல்வதைத் தடுக்க இயலாது. எனினும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டால் அதற்கு மாற்று ஏற்பாடாக தேசிய நெடுஞ்சாலை வழியாகத்தான் வாகனங்கள் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது” என்றார்.
நாடு முழுவதும் சுங்கச் சாவடி கட்டணத்தை முறைப்படுத்தி வாகனங்களுக்கான கட்டணத்தைக் குறைத்தால் மட்டுமே இது போன்ற பிரச்னைக்களுக்குத் தீர்வு ஏற்படும்.