March 16, 2017 தண்டோரா குழு
ஒடிஸாவின் குக்கிராமத்தில் வளர்ந்தவர் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ளார்.
ஒடிஸா மாநிலத்தின் கடலோர கேந்திரபரா மாவட்டத்தில் பாலியா கிராமத்தைச் சேர்ந்த 58 வயது பிபூ பிரசாத் கனுங்கோ ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக சமீபத்தில் பொறுப்பேற்றார்.
தங்களுடைய மண்ணின் மைந்தன் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக சமீபத்தில் பொறுப்பேற்தை அறிந்த அந்த கிராமத்தின் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கின்றனர்.
கேந்திரபராவிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த பாலியா கிராமத்தில் வளர்ந்தவர் பிபூ. அமைதியாகவும் கெட்டிக்காரனாக இருந்த அவர் கிராமத்து பள்ளியில் ஆறாம் வகுப்பு வரை படித்தார். ஓடிஸா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரிலுள்ள மேல்நிலை பள்ளியில் கல்வி பயின்ற அவர் தனது மேல்நிலை தேர்வில் வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து, 1973 முதல் 1975 வரை கேந்திரபரா கல்லூரியில் இடைநிலை அறிவியல் பாடம் படித்தார்.
பிறகு, புவனேஸ்வரில் உள்ள பிஜேபி கல்லூரியில் வரலாற்று பாடத்தில் பி.ஏ. (ஹானர்ஸ்) இளங்கலை பட்டம் பெற்றார் பிபூ. 1978ம் ஆண்டு, உத்கல் பல்கலைக்கழகத்தில் வரலாற்று பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றார்.
1979ம் ஆண்டு, ஒரியண்டல் பாங்க ஆஃப் காமர்ஸ் வங்கியில் தகுதிகாண் அலுவலராகப் பணியில் சேர்ந்தார். 198௦ம் ஆண்டு, கிரேடு பி தேர்வில் வெற்றி பெற்று ரிசேர்வ் வங்கியில் அதிகாரியாகச் சேர்ந்தார்.
பிபூவின் நெருங்கிய உறவினர் டாக்டர் பிஸ்வா பிரகாஷ் கனுங்கோ கூறுகையில்,
“புவனேஸ்வர், பாட்னா, மும்பை, புது தில்லி, ஜெய்ப்பூர், கொல்கத்தா ஆகிய இடங்களில் பணியாற்றினார் பிபூ. குழந்தைப் பருவ நாட்களிலிருந்தே அவன் கல்வியில் திறமையாக விளங்கினான். சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராகப் பதவியேற்றது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது” என்றார்.
“பிபூ தனது படிப்பில் கெட்டிக்காரனாக விளங்கினான். அவருடைய சாதனை எனக்குப் பெருமையாக இருக்கிறது” என்று அவருடைய முன்னாள் தலைமை ஆசிரியர் கூறினார்.
ராஜ் கிஷோர் லென்க என்பவர் கூறுகையில்,
“ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநரின் வேர்கள் இங்கே இருப்பது குறித்துப் பெருமையடைகிறோம். தேசத்தின் நிதி மேன்மையை கவனிக்கும் பெரும் பொறுப்பை எங்களிலிருந்து ஒருவர் கவனிப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது” என்றார்.
புது தில்லியிலிருந்து பிபூ தொலைபேசி மூலம் பேசியபோது,
“இவ்வளவு பெரிய பதவியில் இருப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. என்னுடைய இலக்கை அடைய பல தடைகளைக் கடந்தேன். என்னுடைய தந்தை அரசு பணியில் இருந்தார். என்னுடைய உத்வேகத்திற்கு அவர்தான் மூல காரணம். அவர்களுடைய கடின உழைப்பும் என்னுடைய விடாமுயற்சியும் தான் இந்த வெற்றிக்குக் காரணம்” என்றார்.