July 24, 2017 தண்டோரா குழு
குஜராத் வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணிப் பெண் மற்றும் இரட்டை பெண் குழந்தை பெற்றெடுத்த பெண்ணையும் விமானப்படை அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர்.
கடந்த இரு தினங்களாக குஜராத் மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்துள்ள பகுதிகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்க, இந்திய விமான படையினர் மீட்பு பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் மாவட்டத்திலுள்ள நானா மத்ரா கிராமம் மழையால் பாதிக்கப்பட்டிருந்து. அங்கிருந்து வெளியே வர முடியாமல் பலர் அவதிபட்டு வந்துள்ளனர். அந்த கிராமத்திலுள்ள இரண்டு கர்ப்பிணி பெண்கள் பிரசவ வேதனையால் அவதிபடுகின்றனர், அவர்களை அங்கிருந்து உடனே காப்பாற்ற வேண்டும் என்று இந்திய விமான படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இத்தகவலை அறிந்த அவர்கள் உடனே ஹெலிகாப்டர் மூலம் அந்த கிராமத்திற்கு பறந்துள்ளனர். ஆனால், அவர்கள் அங்கு செல்வதற்கு முன்பதாகவே ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. அவர்களை உடனே மீட்க வேண்டும் என்று தகவல் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
அங்கு சென்ற அவர்கள், பிறந்த இரட்டை குழந்தைகள், அதன் தாயார் மற்றும் உதவியாளர் ஒருவரை ஹெலிகாப்டரில் ஏற்றி கொண்டு, ராஜ்கோட் மாவட்டத்திலுள்ள ஜச்டன் என்னும் இடத்திலுள்ள இடத்தில் தரையிறங்கியுள்ளனர். அங்கு காத்துக்கொண்டிருந்த மருத்துவ குழுவினரிடம் அவர்களை ஒப்படைத்துள்ளனர்.
இந்திய விமான படையினர் அங்கிருந்து புறப்பட்டு, மீண்டும் நானா மத்ரா கிராமத்திற்கு திரும்பியுள்ளனர். அதிக ரத்தப்போக்கால் அவதிப்பட்டுகொண்டிருந்த மற்றொரு கர்ப்பிணி பெண்ணை அங்கிருந்து மீட்டுள்ளனர். அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.