September 13, 2022 தண்டோரா குழு
கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) தலைவர் சிவக்குமார் மின் கட்டண உயர்வு தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 40 ஆயிரம் குறுந்தொழிற்கூடங்கள் இயங்கி வருகின்றன. இதன்மூலம், படித்த மற்றும் படிக்காத 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.இந்த குறுந்தொழிற்கூடங்கள் தமிழ்நாடு மின்சார வாரியம் அளிக்கின்ற மின்சாரத்தையே 100 சதவீதம் நம்பி இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், தற்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் பொதுமக்களிடம் கலந்தாய்வு கூட்டம் நடத்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்தி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதன் அடிப்படையில் தொழிற்சாலைகளுக்கான ஒரு யூனிட் மின் உபயோக கட்டணம் ரூ.6.35ல் இருந்து ரூ.7.50 ஆக அதிகரிக்கப்படும் எனவும், 1 முதல் 50 கிலோவாட் மின் இணைப்பிற்கான நிலை கட்டணம் ரூ.35ல் இருந்து ரூ.75 ஆகவும், 51 கிலோவாட்டில் இருந்து 112 கிலோவாட்டிற்கான நிலை கட்டணம் ரூ.150 ஆகவும், 112 கிலோ வாட்டிற்கு மேலான நிலை கட்டணம் ரூ.550 ஆகவும் அதிகரிக்கப்படும் மற்றும் உச்சபட்ச மின் பயன்பாட்டு நேரத்திற்கான மின் உபயோக கட்டணம் 25 சதவீதம் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கொரோனா தடுப்பு ஊரடங்கு, மூலப்பொருள் விலை ஏற்றம், பொருளாதார மந்த நிலை மற்றும் சந்தை நிலை இன்மை ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு மிகுந்த நெருக்கடியை சந்தித்து வரும் தொழில் முனைவோர்களை இந்த அறிவிப்பு மேலும் நெருக்கடியில் தள்ளுவதாகவும், தொழில் முனைவோர் தங்கள் தொழிலை தொடர்ந்து நடத்த இயலாத நிலைக்கு தள்ளும் சூழ்நிலையும் அமைந்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தற்போதைய நிதி நிலையை கருத்தில்கொண்டு ஒரு யூனிட்டிற்கான மின் பயன்பாட்டு கட்டணம் உயர்த்தப்படுவதாக உள்ள அறிவிப்பு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தாலும், பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ள நிலை கட்டணம் மற்றும் உச்சபட்ச மின் பயன்பாட்டு நேர கட்டணம் ஆகியவை குறுந்தொழில்களையும், அதனை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதித்து தொழில்களை முடக்கும் சூழ்நிலையை உருவாக்கும்.
தமிழக தொழில்துறையின் வளர்ச்சியின் மீது தனி கவனம் செலுத்தி, அதற்காக பலவிதமான திட்டங்களை தீட்டி, செயல்படுத்திக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் தொழில் முனைவோர் தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் நெருக்கடிகளை கருத்தில்கொண்டு, நிலை கட்டண உயர்வு மற்றும் உச்சபட்ச நேர மின் பயன்பாட்டு கட்டண உயர்வு ஆகியவற்றில் இருந்து குடிசை தொழில் மற்றும் குறுந்தொழில்களுக்கு முற்றிலும் விலக்கு அளித்து தொழில் முனைவோர்களையும், அவர்களைச் சார்ந்திருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்திட வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறி உள்ளார்.