March 30, 2017 தண்டோரா குழு
சென்னை ஆர் கே நகரில் குடிநீர், சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதி மேம்படுத்தப்படும். இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்படும் என்று ஒ.பி.எஸ் அணியினர் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
சென்னை ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணியின்(ஒ.பி.எஸ் அணியின்) தேர்தல் அறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
100-க்கும் அம்சங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட, ஆர். கே. நகர் தொகுதி வேட்பாளர் மதுசூதனன் அதனை பெற்றுக்கொண்டார்
தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
ஆர். கே. நகர் பகுதியில் தரமான சாலை, பாதுகாப்பான சாக்கடை வசதி செய்து தரப்படும். ஆரம்ப சுகாதார மையங்களில் ஊழியர்கள் பற்றாக்குறையை போக்க போதுமான ஊழியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கால் பாதிப்பு ஏற்படுவதால் அக்கிடங்கு அகற்றப்பட்டு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆர் கே நகரில் குடிநீர், சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதி மேம்படுத்தப்படும். இளைஞர்களுக்கு சுய தொழிலை ஊக்குவிக்க தொழில் பயிற்சி அளிக்கப்படும். எழில் நகர் பகுதியில் சுற்றுலா மையம் அமைக்கப்படும். வீட்டு மனை இல்லாதவர்களுக்கு ஒவ்வொரு கட்டமாக, பட்டா வழங்கப்படும்.
24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் மற்றும் பாதுகாப்பான சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் வழங்கப்படும். முதியோருக்கு ஓய்வூதியம் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
500 குடும்பங்களுக்கு ஒரு நியாய விலை கடை அமைத்து தரப்படும்.
தற்போது உள்ள பள்ளிகள் போக மேலும 2 உயர்நிலைப்பள்ளிகள், ஒரு மேல்நிலைப்பள்ளி கொண்டு வரப்படும். நடமாடும் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் செயல்படுத்தப்படும் போன்ற பல அம்சங்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.