March 2, 2017 தண்டோரா குழு
“புத்தகங்கள் இல்லாத அறை ஆன்மா இல்லாத உடலுக்குச் சமம்” என்று மார்கஸ் டுல்லியுஸ் சிசெரோ கூறினார்.
புத்தகம் ஒரு மனிதருக்கு இன்றியமையாத ஒன்று. புத்தகம் ஒருவருக்கு நல்ல நண்பன்; தனிமையில் இருக்கும்போது நல்ல துணை. புத்தகம் படிக்கும்போது அது நமக்கு ஒரு புதிய உலகத்தைக் காட்டுகிறது. இருண்ட வீட்டிற்கு ஒளி எவ்வளவு அவசியமோ அதே போல் ஞானத்திற்குப் புத்தகம் அவசியமானது.
கொலம்பியா நாட்டின் பொகோடா நகரின் வசிக்கும் ஜோஸ் ஆல்பர்டோ குட்டிரீஸ் என்பவரைப் புத்தகம் விரும்பும் குழந்தைகள் ‘புத்தங்களின் அதிபதி’ என்று அன்போடு அழைக்கின்றனர்.
குப்பை சேகரிப்பு தொழிலைச் செய்து வரும் ஜோஸ் ஆல்பர்டோ குட்டிரீஸ், பணக்கார குடும்பங்கள் வசிக்கும் சுற்றுப்புறங்களில், தூக்கி எறியப்பட்ட பழைய புத்தகங்களைச் சேகரித்து, தன்னுடைய வீட்டின் தற்காலிகமாக வைத்திருக்கும் நூலகத்தில் சேர்ப்பார்.
இவ்வாறு சிறிது சிறிதாக சேகரித்த புத்தகங்கள் தற்போது 2௦,௦௦௦ சேர்ந்துள்ளன. வாரக் கடைசியில் அவர் தங்கும் வீட்டில் குறைந்த வருமானம் பெரும் குடும்பத்தின் குழந்தைகளுக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அவர்களும் ஆவலோடு அங்கு வந்து தங்களுக்குப் பிரியமான புத்தகங்களை எடுத்துப் படிக்கின்றனர்.
இவ்வாறு கடந்த 2௦ ஆண்டுகளாக தூக்கி எறியப்பட்ட பழைய புத்தகங்களைச் சேகரித்து வருகிறார் ஜோஸ் ஆல்பர்டோ குட்டிரீஸ். அவர் செய்யும் இந்த பணிக்கான நல்மதிப்புக்களை தன்னுடைய தாய்க்குச் சமர்ப்பிக்கிறார். அவரைப் பள்ளிக்கு அனுப்ப வசதி இல்லாத நிலையிலும், ஒவ்வொரு இரவும் அவருடைய தாய் புத்தககங்களைப் படித்துக் காட்டுவதில் தவறியதில்லை.
“பிரபல ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் எழுதிய ‘அன்னா கரீனினா’ என்னும் புத்தகம்தான் எனக்கு முதலாவதாகக் கிடைத்தது. அந்த சிறிய புத்தகம்தான் என் மனத்தில் தீயை ஏற்படுத்தியது. பிறகு அதைச் செயலில் காட்ட முடிவு செய்து புத்தகங்கள் சேகரிப்பு பணியைத் தொடங்கினேன்.
இது போன்ற நூலகங்கள் ஒவ்வொரு சுற்றுப்புறத்திலும், எல்லா நகரங்கள், துறைகள் மற்றும் கிராமப் பகுதியிலும் இருக்க வேண்டும். புத்தகங்கள் தான் நமக்கு பாதுகாப்பு அதுதான் கொலம்பியா நாடும் எதிர்ப்பார்கிறது” என்று ஜோஸ் கூறினார்.
அவருடைய இல்லத்தின் ஒவ்வொரு அறையிலும் புத்தகங்கள் வழிந்தோடுகின்றன. அவருடைய வீட்டின் முதல் மாடியில் “வார்த்தைகளின் வலிமை” (Strength of words) என்ற சமூக நூலகம் உள்ளது.