November 29, 2022 தண்டோரா குழு
குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது இதில் ஐந்து துறைகளைச் சேர்ந்த 139 பேர் பட்டங்களை பெற்றனர்.
பட்டமளிப்பு விழாவில் குமரகுரு கல்வி நிறுவனங்களின் இணைத் தாளாளர் சங்கர் வாணவராயர் வரவேற்புரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசுகையில்,
“இப்போது பட்டம் பெறும் இந்த மாணவர்களே இந்தக் கல்லூரியின் வரலாற்றில் அடித்தளமாக இருக்க போகிறவர்கள். அவர்கள் போட்டு தந்துள்ள இந்த அடித்தளத்தின் மீது தான் கல்லூரி தனது வளர்ச்சியை கட்டமைக்கப் போகிறது. ஏனெனில் உங்களைக் கொண்டே இந்தக் கல்லூரி பரிசோதனைகளையும் சாதனைகளையும் செய்தது. அதற்காக உங்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்று கூறினார்.
மேலும் அவர், ”இக்கல்லூரி புதிய நிறுவனம் தான்.ஆனால் ஒரு பழைய பாரம்பரியத்தின் தொடர்ச்சியில் உள்ள நிறுவனம். அந்த அனுபவத்தில் நாங்கள் புதிய புதிய முயற்சிகளை வித்தியாசமான அணுகுமுறைகளுடன் செய்துள்ளோம்; செய்துகொண்டிருக்கிறோம். அதன் விளைவாக கிடைத்த மதிப்புமிக்க ரத்தினங்களாகப் பட்டங்களுடன் வெளியேறும் நீங்கள்கல்லூரியின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க புள்ளியாக இருக்கப்போகிறீர்கள்; ஏனெனில் நீங்கள் கல்லூரியில் முதல் அணியாக வெளியேறும் பட்டதாரிகள்” என்றார்.
விழாவில் தலைமை உரை ஆற்றிய குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பி கே கிருஷ்ணராஜ் வாணவராயர்,
பன்முகத்தன்மை”என்ற சொல் அரிதாக வழக்கத்தில் இருந்த நேரத்தில், பன்முகக் கலை அறிவியல் கல்லூரியின் தனித்துவமான கற்பித்த முறைமைகளைப் புரிந்துகொண்டு தங்கள் பிள்ளைகளைக் கல்வி கற்க அனுப்பி வைத்த பெற்றோர்களுக்கு நன்றியினைத் தெரிவித்தார். கற்கை முறைகளில் பல்வேறு பாதைகளைக் கடைப்பிடிக்கும் பன்முகக்கலை அறிவியல் கல்வி என்னும் முயற்சி இந்த வட்டாரத்தில் முதல் முயற்சி என்பதைக் குறிப்பிட்டுப் பேசிய டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர், இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றி விரிவாகப் பேசினார்.
“இந்தியா உலகை வழிநடத்த தயாராக உள்ளது” என்று கூறிய அவர், கோவிட் தொற்று நோயை எதிர்கொண்டு வளர்ந்து நிற்கும் அதன் வலிமையை எடுத்துக் காட்டி, இந்த வலிமை எதிர்காலத்தில் மேலும் வலிமையுடன் வெளிப்படும் என்றார்.”இன்றைய இந்தியா ஒரு லட்சிய இந்தியாவாக இருக்கிறது, அது வழங்கும் வாய்ப்புகளும் மகத்தானவையானவையாக இருக்கின்றன”என்று கூறிய அவர், ” இப்போதைய பட்டதாரிகள் எதிர்கொள்ளும் உலகமும் எனது காலத்தில் பட்டதாரிகள் எதிர்கொண்ட உலகமும் பெரும் வேறுபாடுகள் கொண்டவை; இப்போது பட்டம் பெற்று வெளியேறுபவர்களுக்கு பலவிதமான வாய்ப்புகளையும் திறப்புகளையும் இந்தியா உருவாக்கித் தருகின்றது. அவற்றைத் திறமையுடன் பயன்படுத்திக் கொள்வதின் மூலம் நாடும் உலகமும் மாறிக்கொண்டே இருக்கும் போக்கில் நீங்கள் இணைந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு உரையை வழங்கிய நந்தி அறக்கட்டளைகளின் தலைமை நிர்வாக அதிகாரி மனோஜ் குமார்,
“மாணவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் நம்பகத்தன்மையை வெளிப்படுத்துபவர்களாக இருக்க வேண்டும்; ஏனென்றால் அதுவே எல்லாவற்றுக்குமான திறவுகோல் எனக் குறிப்பிட்டு உரையாற்றினார்.
“நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களைப் போல இருக்க வேண்டும் என்றவொரு நிலையான அழுத்தத்தைக் கொண்ட ஒரு காலத்தில் வாழ்கிறோம். ஆகவே, ‘நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதற்கும் நீங்கள் என்ன ஆக விரும்புகிறீர்கள் என்பதற்கும் இடையிலான இடைவெளியைத் தொடர்ந்து குறைக்க முயற்சிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; அதைக்கொண்டே உங்களை மதிப்பீடு செய்ய விரும்புவேன் ”என்று அவர் கூறினார்.
மாணவர்கள் தைரியமாகச் சுதந்திரமான முடிவுகளை எடுக்க வேண்டும், நேர்மையாகப் பேச வேண்டும், தவறு செய்ய பயப்படவும் வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
மாணவர்களை மாற்றத்திற்கு தயாராக இருக்குமாறு கேட்டுக் கொண்ட அவர், வரலாற்றிலோ எதிர்காலத்திலோ இதுபோன்ற விரைவான மாற்றத்தை நாம் காணப் போவதில்லை என்றார். கோவிட் ஒரு விதிவிலக்கு என்றாலும், மாற்றங்கள் தவிர்க்க முடியாததாக இருக்கும். ஒவ்வொருவரும் முன்னோக்கி செல்லும்போது, வேலை வாய்ப்பளிக்கும் சந்தைகளும் மாறும். அதனை எதிர் கொள்ளும் விதமாக பன்முகத்தன்மை கொண்டவர்களாக – தேவையான திறன்களைக் கொண்டவர்களாக நம்மை வளர்த்துக்கொள்வது அவசியம் எனக் கேட்டுக் கொண்டார். உணர்ச்சி நுண்ணறிவை வளர்த்துக் கொள்வது எதிர்காலத்திற்கு தேவையான திறன் என்று கூறிய அவர், அறிவு தொடர்ந்து இயல்பாக்கப்படும் சூழலில் அனைவரும் அணுகக் கூடியதாக மாறும் என்றார்.
ஆனால் அறிவைப் பயன்படுத்துவதில் வேறுபாடு இருக்கும். அங்குதான் உணர்வுப் பூர்வமான நுண்ணறிவு பலன் தரும் என்பதையும் விளக்கினார். எதிர்காலத்தில் தொழில்நுட்பம் அல்லது தொழில்நுட்ப வல்லுநர்கள் இருக்கப் போவதில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். மனித இயல்பை அறிந்தவர்களாகவும், மக்களை நிர்வகிக்கத் தெரிந்தவர்களாகவும், மக்களை ஆளத் தெரிந்தவர்களாகவும் இருப்பதே முதன்மையான தேவையாக இருக்கப்போகிறது. அதனைத் தருவதற்குப் பன்முகப்பார்வையும் தாராளவாதக் கலைகளும் அவற்றின் வழியாகக் கிடைக்கும் மனிதநேயமும் உதவும் என்றார்.
“உலகம் முழுவதுமே அந்தத் திசையில் சிந்திக்கத் தொடங்குவதற்கு முன்பே நீங்கள் ஒரு புதிய அறிவுப் பரப்பை அறிந்து கொண்டிருக்கிறீர்கள் ” என்று அவர் கூறினார்.தொடர்ந்து , “நமது உணவு முறையைப் பற்றி மாணவர்கள் சிந்திக்க வேண்டும்; உணவு எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது; அது என்னவாக மாறுகிறது என்பது இப்போது கவலைக்குரிய ஒன்று” என்று குறிப்பிட்ட அவர், ‘சரியான வழியில் உற்பத்தி செய்யப்பட்ட உணவுக்கான ஓர் இடத்தை ஒவ்வொரு வளாகத்திலும் உருவாக்கி அதனைப் பங்கீடு செய்யும் தொழில் முனைவோர்களாக மாணவர்களைப் பங்கேற்கச் செய்வது பற்றிச் சிந்திக்க வேண்டும் என்றார்.
நமது காலத்தில் நிலவும் பாலின சமத்துவமின்மையும் கவனத்துக்குரிய ஒன்று என்றும் அவர் கூறினார். “நீங்கள் ஒரு ஆணாக இருந்தால், ஒவ்வொரு நாளும் சிறப்பாக நடந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். ஏனென்றால் ஆணாதிக்கம் என்பது மிகப்பெரிய நோயாகும். நம்மோடு பிறந்த அந்த நோயை உடனடியாக வெளியேற்றும் வகையறிய வேண்டும். நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், உங்கள் மகனை வித்தியாசமாக வளர்க்கும் நேரம் வந்துவிட்டது என்பதை உணருங்கள். ஒவ்வொரு இடத்திலும் பெண்களுக்கான சமத்துவத்தைக் கேட்டுப் பெறுங்கள் ‘ என்று வலியுறுத்திக் கூறினார்.
பன்முகக் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் விஜிலா எட்வின் கென்னடி, தனது உரையில் , “மாணவர்களும் நிறுவனமும் இணைந்து பெற்ற வெற்றியைக் கொண்டாடும் நாள் இன்று. இந்தக் கல்லூரி பெற்றெடுத்த முதல் தொகுதிப் பிள்ளைகள் நீங்கள்; இந்தச் சமூகத்தின் மீது உங்கள் தாக்கம் இருக்கும் என்று நிறுவனம் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறது “என்று கூறியதோடு, “சிறந்து விளங்குவது ஒரு தற்செயலானதல்ல; ,அது கடின உழைப்பு, உறுதிப்பாடு, ஆர்வம் மற்றும் வெற்றிக்கான உந்துதல் ஆகியவற்றின் விளைவு” எனக் கூறி வாழ்த்தினார்.