April 6, 2017 தண்டோரா குழு
மனிதர்களை போல் நடக்க தெரியாமலும், பேச முடியாமலும் குரங்குகளுடன் வாழ்ந்து வந்த 8 வயது சிறுமியை உத்தரபிரதேச மாநிலத்தின் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
மொட்டிபூர் வரம்பிலுள்ள கத்ரீனாகாத் வனவிலங்கு சரணாலயத்தில் இரவு ரோந்து சென்ற துணை இன்ஸ்பெக்டர் சுரேஷ் யாதவ் அந்த சிறுமியை கண்டுபிடித்துள்ளார். அந்த சிறுமி குரங்குகளுடன் வாழ்வதை கண்டு ஆச்சரியம் அடைந்த அவர், அவளை காப்பாற்ற நினைத்தார். சிறுமியின் அருகில் சென்று அழைத்த அவரை, குரங்குகள் சத்தமிட்டன. அந்த சிறுமியும் அதேபோல் செய்துள்ளாள். பல மணி நேர போராட்டதிற்கு பிறகு அந்த சிறுமியை காப்பாற்றி, அந்த மாவட்டத்தின் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
மருத்துவமனையில் அந்த சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறுகையில்,
“பேசவோ நமது மொழியை புரிந்துக்கொள்ளவோ அவளால் முடியவில்லை. மனிதர்களை கண்டால் மிகவும் பயப்படுகிறாள். வன்முறையான முறையில் நடந்துக்கொள்கிறாள்.
தற்போது சிகிச்சைக்கு பிறகு சில முன்னேற்றங்கள் அவளிடம் தெரிகிறது. அவளுடைய முன்னேற்றங்கள் மெதுவாக இருக்கிறது. உணவை கையில் எடுத்து உண்ணாமல், வாய்மூலம் தான் உண்ணுகிறாள். கால்களால் நடக்க பயிற்சி அளித்த பிறகும், சில நேரங்களின் கைகளையும் கால்களையும் சேர்த்து காட்டு விலங்குகளை போல் தான் நடக்கிறாள்” என்று தெரிவித்தனர்.