June 8, 2022
உலக நாடுகளில் குரங்கு அம்மை எனப்படும் வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவில் குரங்கு அம்மை வைரஸ் நோய்க்கு யாரும் பாதிக்கப்படவில்லை. இருந்தபோதிலும் நாடு முழுவதும் சுகாதார பணியாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளை தீவிரமாக கண்காணிக்க, ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்திலும், குரங்கு அம்மை கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
கோவையில் குரங்கு அம்மை அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் விவரங்களை, சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டுமென, தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது
இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது,
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, வெளிநாடுகளில் இருந்து கோவை வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக் கப்படுகின்றனர். மேலும் விமான நிலையத்தில் சுகாதார குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
காய்ச்சல், உடலில் தடிப்பு உள்ளிட்ட குரங்கு அம்மை நோய் அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் விவரங்களை சுகாதாரத் துறைக்கு தெரிவிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவையில் இதுவரை குரங்கு அம்மை அறிகுறிகளுடன் யாரும் சிகிச்சை பெறவில்லை என்றார்.