April 21, 2022 தண்டோரா குழு
கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) தலைவர் சிவக்குமார் கூறியிருப்பதாவது:
தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற குறு சிறு தொழில் துறை மானிய கோரிக்கையின் போது, தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா மோ அன்பரசனால் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்காக, தமிழக அரசு வங்கிகளின் மூலமாக 100 கோடி கடன் வழங்கப்படும், அகில இந்திய அளவில் தொழில் துறையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் தமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் ஆகிய அறிவிப்புகளை காட்மா சங்கம் வரவேற்கிறது.
அதே நேரத்தில் குறு சிறு தொழில் முனைவோர்களால் எதிர்பார்க்கப்பட்ட கோரிக்கைகளான, தொழில் நகரமான கோவையில் தமிழக அரசின் சார்பில் புதிதாக தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட வேண்டும், தொழில் முனைவோருக்கு மின்கட்டண சலுகைகள் வழங்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் குறித்த அறிவிப்புகள் எதுவும் இடம் பெறவில்லை. தமிழக அரசு, தொழிற்பேட்டை மற்றும் தொழில் முனைவோருக்கான மின் கட்டன சலுகைகள் குறித்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.