March 30, 2017 தண்டோரா குழு
சீனாவில் யானை தந்தத்தின் விலை வெகுவாக குறைந்துள்ளதாகவும் இந்த வருட இறுதிக்குள் யானை தந்த வர்த்தகம் முழுவதுமாக ஒழிக்கப்படும் எனவும் தெரிகிறது.
உலகில் வாழும்பெரும்பாலான யானைகள் அவைகளின் தந்ததிற்காக கொல்லப்படுகின்றன. உலகளவில் சீனாவில் யானை தந்தங்களின் தேவை மிக அதிகமாக இருந்ததால், ஆப்பிரிக்காவில் நிறைய யானைகள் இதற்காக கொல்லப்பட்டன.வருடத்திற்கு சுமார் 20,000 யானைகள் தந்தத்திற்காக கொல்லப்படுகின்றன எனவும் இது ஆப்பிரிக்க யானைகள் அழிவுக்கு முக்கிய காரணம் எனவும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.
இதையடுத்து, சீன அரசாங்கம் யானை தந்தத்தின் வர்த்தகத்தை நிறுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.
இதற்காக யானை தந்தத்தை ஆபரணங்கள் மற்றும் பரிசு பொருட்களாக தயாரிக்கும் தொழிற்சாலைகளை இந்த மாதத்திற்குள் மூடவும் யானை தந்தத்தினால் ஆன பொருட்களை விற்கும் கடைகளை இந்த வருட இறுதிகுள் மூடவும் சீன அரசாங்கம் முயன்று வருகிறது.
அதன்படி 2014-ம் ஆண்டில் ரூ 1.36 லட்சமாக இருந்த 1 கிலோ யானை தந்தத்தின் விலை ரூ 47,000-மாக குறைந்துள்ளதாககூறப்படுகிறது. யானை தந்தத்தின் வர்த்தகம் சீனாவில் முழுவதுமாக ஒழிக்கப்பட்டால், ஆப்பிரிக்காவில் யானைகள் கொல்லப்படுவது நிறுத்தப்படும் எனவும் இதனால் யானைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் யானை பாதுகாப்பு குழுகள் தெரிவித்துள்ளன.
எனினும், சீனாவின் பொருளாதார மந்த நிலையினாலும் தந்தத்தின் விற்பனை குறைந்ததாக கூறப்படுகிறது.