March 17, 2017 தண்டோரா குழு
கோவையில் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதன் தலைவர் கொளத்தூர் மணி வலியுறுத்தியுள்ளார்.
கோவை உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் பரூக். 31 வயதான இவர் உக்கடம் பழைய இரும்பு மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்தார். பாரூக் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர்.
வியாழன் இரவு சில மர்ம நபர்களால் மாநகராட்சி கழிவுநீர்ப் பண்ணை அருகே படுகொலை செய்யப்பட்டார். உக்கடம் காவல் துறையினர் பரூக்கின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பரூக்கின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
பரூக் கொள்கை விரோதத்தினால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட பரூக் உடல் பரிசோதனை நடத்தப்பட்ட அரசு மருத்துவமனைக்கு வந்த திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு. ராமகிருட்டிணன் ஆகியோர் பரூக்கின் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கொளத்தூர் மணி, “மதங்களுக்கு ஏதிரான கருத்துக்களை முன் வைப்பவர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இந்தக் கொலை குறித்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. காவல் துறையினர் கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.