August 17, 2023 தண்டோரா குழு
கோவை மாவட்டம், புலியகுளம், கிருஷ்ணசாமி நகரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அமுதம் அங்காடி நியாயவிலைக்கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட்ட விவரம் குறித்த பதிவுகளை,விற்பனை முனைய இயந்திரத்தினை இயக்கி ஆய்வு செய்ததுடன்,இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி,பாமாயில், கோதுமை, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்பு விவரங்களையும் கேட்டறிந்ததுடன், குடும்பஅட்டைதாரர்களுக்கு வழங்கப்படவேண்டிய பொருட்களை உரிய நேரத்தில் வழங்கவும் மாவட்ட ஆட்சித்தலைவர் நியாயவிலை கடையின் விற்பனையாளர்களிடம் அறிவுறுத்தினார்.
மேலும், கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டது குறித்து ஆய்வு செய்து, விடுபட்டவர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, புலியகுளம், பெரியார் நகர் அங்கன்வாடி மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அங்கிருந்த குழந்தைகளிடம் கலந்துரையாடி அவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து கேட்டறிந்தார்.
தேசிய குடற்புழு நீக்க முகாமானது மாவட்டத்திலுள்ள 1697 அங்கன்வாடி மையங்கள், 985 தனியார் பள்ளிகள், 1070 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், 150 கல்லூரிகள், 89 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 328 துணை சுகாதார நிலையங்களில் நடைபெற்றது. இம்முகாம்களில் அல்பெண்டாசோல் எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரை இலவசமாக வழங்கப்பட்டது. மேலும், விடுப்பட்ட குழந்தைகளுக்கு 24.08.2023 சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
அதன்படி இன்று ராமநாதபுரம், மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க முகாம் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மாணவர்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் குறித்தும், அவர்களுக்கு வழங்கப்படும் மருந்துகளின் விவரங்கள் குறித்து துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) அவர்களிடம் கேட்டறிந்தார்.