June 1, 2017 தண்டோரா குழு
குழந்தைகளில் படிப்பிற்காக தனது சிறுநீரகத்தை விற்க உள்ளதாக ஆக்ராவில் வசிக்கும் தாய் ஒருவர் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த ஆர்த்தி சர்மா என்ற பெண், எட்டு உறுப்பினர்கள் கொண்ட தனது குடும்பத்தை வெறும் 330 சதுர அடி வீட்டில் நடத்தி வருகிறார். இவருக்கு மொத்தம் நான்கு குழந்தைகள். அவர்களில் 3 பேர் பெண் குழந்தைகள்.அவர்களுடைய படிப்பிற்கு தேவையான பண உதவி இல்லாத காரணத்தால், தனது சிறுநீரகத்தை விற்க உள்ளதாக பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
இது குறித்து ஆர்த்தி கூறுகையில்,
“என்னுடைய கணவர் சிறிய அளவில் ஜவுளித்தொழில் செய்து வந்தார். ஆனால், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி கொண்டு வரப்பட்ட பண மதிப்பிழப்பு காரணமாக, அவருடைய தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் என் குழந்தைகளை பள்ளிக்கு சரியாக அனுப்ப முடியவில்லை. அவர்களுடைய கல்விக்கு கடன் தருமாறு மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டேன். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர். ஏப்ரல் 29ம் தேதி முதலமைச்சர் யோகியை அவருடைய வீட்டில் சந்தித்து, எனது குறையை தெரிவித்தேன். ஆனால் இதுவரை, எந்த உதவியும் கிடைக்கவில்லை.
பண மதிப்பிழப்பு வருவதற்கு முன், எங்களுடைய வாழ்க்கை நன்றாக இருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம், எங்களுடைய சேமிப்பு மற்றும் நன்கொடையால், 11 ஏழை பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தோம். மற்றவர்களுக்கு உதவி செய்தோம் ஆனால் பணம் பற்றாக்குறையால் நாங்கள் கஷ்டப்படும்போது, எங்களுக்கு யாரும் உதவ முன் வரவில்லை” என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
மேலும் நான் கால் டாக்ஸி ஒட்டுவதன் மூலம் மாதம் 5௦௦௦ ரூபாய் மட்டுமே ஊதியமாக கிடைக்கிறது. நாங்கள் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளர், வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளார். தற்போது எங்கே போவது என்று தெரியவில்லை. இதனால்தான், என் மனைவி தனது சிறுநீரகத்தை விற்க முடிவெடுத்தாள்” என்று ஆர்த்தியின் கணவர் வேதனையுடன் கூறினார்.