November 28, 2022 தண்டோரா குழு
தேசிய குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டம் மற்றும் அவிநாசிலிங்கம் நிகர் நிலை மகளிர் பல்கலைக்கழகம் விரிவாக்கத் துறையுடன் இணைந்து குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி பேரூராட்சிக்குட்பட்ட வச்சிணாம்பாளையம் பகுதியில் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வார்டு உறுப்பினர் தேன்மொழி தலைமை வகித்தார்.அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக சமூகப் பணியில் துறை இரண்டாம் ஆண்டு மாணவி காவ்யதர்ஷினி வரவேற்றார்.ராமமூர்த்தி,சுந்தராம்பாள் முன்னிலை வகித்தனர்.ரங்கநாதன் வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் பங்கேற்று தேசிய குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் இயக்குனர் டி.வி. விஜயகுமார் பேசும்போது ,
குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. குடும்பச் சூழல் , பொருளாதார நெருக்கடிகளைக் கடந்து குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவது பெற்றோரின் தலையாய கடமையாகும். குழந்தைகளுக்கான கல்வி வாய்ப்பு மறுக்கப்படுகிற போது அவர்கள் வேறு ஏதேனும் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு எதிர்காலத்தையே பாழாக்கி கொள்கிறார்கள்.
மேலும்,சிறு வயதிலேயே குழந்தைத் தொழிலாளர்களாக பல்வேறு தொழில்களில் ஈடுபட காரணமாகவும் அமைந்து விடுகிறது . ஆகவே, குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு பெற்றோர்கள் குழந்தைகளுக்கான கல்வி வாய்ப்புகளை தவறவிடக்கூடாது என வலியுறுத்தினார். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
குழந்தைகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.நிறைவாக ஷர்மிளா நன்றி கூறினார்.