July 19, 2017 தண்டோரா குழு
சேலம் ரயில் நிலையத்தில் குழந்தைகள் மீட்பு மையம் மற்றும் செயலி கொண்டு இயங்கும் ஓலா வாடகைக் கார் வசதியினை தெற்கு ரயில்வே தலைமை வணிக மேலாளர் பிரியம்வதா விசுவநாதன் மற்றும் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.
ரயில் நிலையங்களில் தவறவிடப்படும், காணாமல் போகும், வீட்டிலிருந்து ஓடிவந்து ரயில்நிலையத்தில் தஞ்சம் புகும் சிறார் மற்றும் தொழிலுக்கு கடத்தப்படும் குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு உதவி அவர்களது பெற்றோர் வசம் ஒப்படைக்க இந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, சேலம் ரயில்நிலையத்தின் நடைமேடை எண்.1/1Aல் அமைக்கப்பட்டுள்ள சிறார் உதவி மையத்தை இன்று திறந்து வைத்தனர்.
இந்த உதவி மையம் உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு 24 மணி நேரமும் சேவை நிறுவனங்கள், ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் அரசு ரயில்வே போலீஸ் அமைப்புகளுடன் இணைந்து தேவையான உதவிகளை, வழங்கும்.
அதன் பின்னர் பிரியம்வதா மற்றும் வர்மா ஆகியோர் சேலம் ரயில்நிலையத்தில், செயலி கொண்டு ஓலா வாடகைக்கார் முன்பதிவு செய்து பயணிக்கும் வசதியை தொடக்கி வைத்தனர்.
இதனால், சேலம் ரயில் நிலையம் வந்திறங்கும் பயணிகள், செல்பேசி செயலி மூலம் அல்லது சேலம் ரயில் நிலையத்தில் உள்ள வாடகைக்கார் முன்பதிவு மையம் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் பயணிக்க முடியும்.
“கோவைக்கு அடுத்தபடியாக சேலம் கோட்டத்தில் சேலம் ரயில்நிலையத்தில் இத்தகு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுப்பதில் தெற்குரயில்வேய முன்னணியில் உள்ளது,” என்று பிரியம்வதா கூறினார்.
சேலம் கோட்டத்தில் உள்ள இதர முக்கிய ரயில்நிலையங்களிலும் இந்த வசதி விரைவில் விரிவு படுத்தப்படும் என்று சேலம் கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா தெரிவித்தார்.