March 21, 2023 தண்டோரா குழு
கோவை நவ இந்தியா அருகே உள்ள தனியார் கல்லூரியில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பான, கோவை மண்டல அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கருத்தரங்கிற்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமை தாக்கினார்.
இக்கருத்தரங்கில் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பேசியதாவது:
குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பாக ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த உதவியர்கள், உதவி ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள், காவல்துறை, வருவாய்த்துறை, குழந்தை பாதுகாப்பு அலகு, சமூகநலத்துறை, கல்வித்துறை, குழந்தை பாதுகாப்பு அலகு உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடனான மண்டல அளவிலான பயிலரங்கம் இது.
குழந்தை தொழிலாளர் சட்டம் படி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எவ்விதமான தொழிலிலும் ஈடுப்படுத்தக்கூடாது, 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழிலில் ஈடுப்படுத்தக்கூடாது. குழந்தை தொழிலாளர்கள் மற்றும் வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்தும் நிறுவனத்தின் மீது குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அதிக அளவு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக விளங்குகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணக்கர்களின் சேர்க்கை அதிகமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2016 சட்டத்திருத்திற்கு பிறகு குழந்தை தொழிலாளர் முறை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இம்முறையை ஒழிக்க பள்ளிகளில் வருகையினை கண்காணிக்க வேண்டும். தொடர்ச்சியாக பள்ளிக்கு வராமல் இருக்கும் குழந்தைகளின் விவரங்களை சேகரித்து, ஒருவேளை அவர்கள் ஏதாவது தொழிற்சாலைகளில் வேலை செய்துவந்தால் அவர்களை மீட்டு, அரசின் திட்டங்கள் மூலம் வாழ்வாதார பாதுகாப்பு அளிப்பதுடன், தொடர் கல்வி வழங்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
குடும்ப சூழ்நிலை காரணமாக மட்டுமின்றி ஒரு சில இடங்களில் கட்டாயப்படுத்தி குழந்தைகளை தொழிலாளராக பணி அமர்த்துவார்கள். இது குறித்து தகவல் அறிந்துவுடன் மிக கவனமாக செயல்பட்டு அந்த குழந்தைகளை மீட்க வேண்டும். குழந்தை தொழிலாளர் முறை மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் முற்றிலும் ஒழிக்கும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். குழந்தை தொழிலாளர் தொடர்பான புகார்களை வலைதளத்திலும், கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு நீதித்துறை பயிலக துணை இயக்குநர் எஸ்.பி.ரிஷிரோஷன், தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையர் டி.தமிழரசி, இணை ஆணையர் லீலாவதி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் துணை இயக்குநர் எம்.கலைமதி, தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட திட்ட இயக்குநர் டி.வி.விஜயகுமார், தமிழ்நாடு கூட்டணி நிறுவன உறுப்பினர் பி.பாலமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.