May 12, 2016 தண்டோரா குழு
70 வயது மூதாட்டி ஒருவர் சோதனைக் குழாயின் மூலம் கருத்தரித்து ஒரு ஆண்மகவையும் ஈன்றெடுத்தது விஞ்ஞானத்தின் வெற்றியாகும்.
மொஹிந்தர் சிங் கில் அவரது மனைவி டல்ஜின்டர் கவுர். இருவரும் திருமணமாகி 46 ஆண்டுகள் ஆகியும் குழந்தையின்றி துயரத்தில் வாடிக் கொண்டிருந்தனர். பலவித சோதனைகள், பலவித முயற்சிகள், செய்தும் எந்தப் பலனும் கிட்டவில்லை.
வேறு வழியின்றி 1980ம் வருடம் ஒரு ஆண்மகவைத் தத்தெடுத்துள்ளனர். ஆனால் துரதிருஷ்டவசமாக மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற அவரது மகன் திரும்பி வரவில்லை.
அவர்களது குடும்ப வழக்கப்படி எவருக்கு வாரிசு இல்லையோ அவர்களுக்குத் தந்தையின் சொத்தில் எந்தப் பங்கும் அளிக்கப்படமாட்டாது. அது நிலமாக இருந்தாலும் சரி. பணமாக இருந்தாலும் சரி.
குழந்தையின்மை கடவுளின் சாபம் என்ற உற்றார் உறவினர்களின் ஏச்சுக்கும், ஏளனத்திற்கும் ஆளாகி மனம் வாடி தவித்துக் கொண்டிருந்தனர். எப்படியும் தங்களுக்கென ஒரு மகவு வேண்டுமென்ற எண்ணத்தில் பலவித முயற்சிகளை விடாது செய்து வந்தனர் அந்தச் சமயத்தில்தான் செயற்கைக் கருக்கூட்டல் விளம்பரத்தைப் பார்த்துள்ளனர்.
இந்த விளம்பரம் சோதனைக் குழாய் மூலம் மகப்பேறு தரிக்கச் செய்யும் அமைப்பினால் தரப்பட்டது.
அதாவது பெண்ணின் கரு முட்டையையும் ஆண் விந்துவையும் இணைத்து ஒரு சோதனைக் குழாய்க்குள் செலுத்துவர்.
பெண்ணின் கர்ப்பப்பையில் கரு எந்தச் சூழ்நிலையில் இருக்குமோ அந்தச் சூழ்நிலையை வேதிதுறை ஆய்வுக் கூடத்தில் உருவாக்கி சோதனைக் குழாயை அங்கு வைத்துக் கண்காணிப்பர்.
பின்பு கரு முளைவிட்டதும் அதைப் பெண்ணின் கர்ப்பப்பைக்குள் செலுத்துவர். இந்த விளம்பரத்தைக் கண்ட கில் தம்பதியினர் இம்முறையை முயற்சிக்க முடிவெடுத்தனர்.
பணப்பற்றாக்குறையின் காரணமாக சில சிகிச்சைகளை அவர்களால் முழுவதும் நிறைவேற்ற முடியாத நிலைமையில் இருந்தனர்.
எப்படியும் குழந்தை பெற்றெடுத்தே தீருவது என்ற தீர்மானத்தில் நீதி மன்றத்தின் துணையோடு சொத்தில் தனது பங்கைப்பெற்று, கிடைத்த அந்தச் சிறிய துண்டு நிலத்தை விற்று சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.
அதன் பயனாக சோதனைக் குழாய் கருத்தரிப்பு மையத்தின் மருத்துவரை அணுகியுள்ளனர். டாக்டர். அனுராங் பிஷ்னாய் 2008ம் ஆண்டு ராஜோதேவி என்ற 70 வயதுப் பெண்மணிக்கு இந்தச் சிகிச்சை செய்ததன் மூலம் அவர் ஒரு பெண் மகவை ஈன்றெடுத்தார். மற்றுமொரு 66 வயது பெண்மணி ஒரே பிரசவத்தில் 3 மகவைப் பெற்றெடுத்தார்.
டாக்டர். அனுராங் பிஷ்னாய் முதலில் சிறிது தயங்கியுள்ளார். பிறகு இதயப் பரிசோதனை போன்ற எல்லாவித சோதனைகளையும் செய்துள்ளார். முடிவாக கௌர் குழந்தைப் பெற்றெடுக்க ஆரோக்கியமுள்ளவரே என்று அறிவித்தார்.
முதல் இரண்டு முறை சிகிச்சை எந்தப் பலனும் அளிக்கவில்லை. மூன்றாவது முறை பலனளித்தது. அதன் பயனாக கவுர் 2 கிலோ எடையுள்ள ஒரு ஆண் மகவைப் பெற்றெடுத்தார். அதற்குப் அவர்கள் அர்மான் என்ற பெயரைச் சூட்டினர்.
கடவுள் தங்களுடைய வேண்டுதலுக்குச் செவி சாய்த்து விட்டார் என்றும் தங்களுடைய வாழ்க்கை முழுமையடைந்தது என்றும், இப்பொழுதுதான் அவர்கள் மிகுந்த இளமையாக உணர்கிறார்கள் என்றும் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
முதுமை காரணமாக குழந்தை பராமரிப்பதில் சிரமம் இருக்குமே என்ற கேள்விக்கு தங்களுடைய கூட்டுக் குடும்பத்தில் உள்ள தனது சகோதரரும் மற்ற உறுப்பினரும் உறுதுணையாக இருப்பர் என்றும் பதிலளித்துள்ளனர்.
அவரது மற்றுமொரு சகோதரரும் மகப்பேறற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சட்டம் 45 வயதுக்கு மேல் ஆன பெற்றோர் தத்தெடுத்தலை அனுமதிப்பதில்லை. மிகுந்த ஆற்றல் வாய்ந்தவனும், எங்கும் நிறைந்தவனுமான இறைவன் தங்கள் காலத்திற்குப் பின் தங்கள் குழந்தையை காப்பாற்றுவான் என்றும் உறுதிப்படக் கூறியுள்ளனர்.
45 முதல் 50 வயது முதிர்ந்த பெண்களுக்கு IVF சிகிச்சை முறை மூலம் கருத்தரிக்கச் செய்வது முறையாகாது என்று பலர் கருதுகின்றனர். அவ்வண்ணமாயின் அதே வரைமுறை ஆண்களுக்கும் பயன்படுத்த வேண்டும் என்று டாக்டர் பிஷ்னாய் கருத்துத் தெரிவித்துள்ளார்.