October 26, 2021 தண்டோரா குழு
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் 64 குவாரிகள் மூடல் காரணமாக கிரைண்டர் உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான தரமான கற்கள் கிடைக்காமல் கோவையில் வெட்கிரைண்டர் உற்பத்தி பாதிக்கப்பட்டு தொழில் முடங்கியுள்ளது.
கோவை மாவட்டத்தில் வெட்கிரைண்டர் உற்பத்தி, கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. கோவையில் மட்டும் வெட்கிரைண்டர் உற்பத்தி சார்ந்து நேரடியாகவும், மறைமுகவாவும் ஒரு லட்சம் குடும்பங்கள் உள்ளன. ஆண்டுக்கு ரூ.600 கோடி வரை வர்த்தகம் நடைபெறுகிறது. கோவையின் அடையாளமாக உள்ள இந்த வெட்கிரைண்டர்களுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
கொங்கு மண்டலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய தரம் வாய்ந்த கற்களால் இவை உருவாக்கப்பட்டு வருகின்றன. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கோவையில் இத்தொழில் சார்ந்து உள்ளன.
கோவையில் வெட்கிரைண்டர் உற்பத்தியை பொறுத்தவரை ஒரு லிட்டர் முதல் 40 லிட்டர் வரை, 2 லிட்டர் முதல் 40 லிட்டர் வரை மற்றும் 2 மற்றும் 3 லிட்டர் வரை பல்வேறு ரகங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன.தமிழகம் மட்டுமில்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் கோவையின் வெட்கிரைண்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஊத்துக்குளியில் செயல்பட்டு வந்த 64 குவாரிகளை சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற மூட உத்தரவிட்ட நிலையில், கிரைண்டர் உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான தரமான கற்கள் கிடைக்காமல், கோவையில் வெட்கிரைண்டர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு மூலப்பொருட்கள் மற்றும் தற்போதைய தட்டுப்பாட்டால் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதால், தீபாவளி ஆர்டகளும் குறைந்துள்ளது.
இதுகுறித்து கோவை வெட்கிரைண்டர் மற்றும் உதிரி பாகம் தயாரிப்பாளர் சங்க தலைவர் சவுந்திரகுமார் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் இருந்து தான் தரமான கற்கள் வெட்கிரைண்டர் உற்பத்திக்கு கிடைத்து வந்தன. தற்போது குவாரிகள் மூடப்பட்டுள்ளதால் கடந்த இரு மாதங்களாக வெட்கிரைண்டர் உற்பத்தி தடைபட்டுள்ளது. டேபிள் டாப் மற்றும் டில்டிங் ரகங்களுக்கு மட்டும் நாமக்கல்லில் இருந்து கற்கள் கிடைக்கிறது. அந்த கற்களைக் கொண்டு வழக்கமான பெரிய சைஸ் ரக வெட்கிரைண்டர் தயாரிக்க முடியாது. இதுவும் எத்தனை நாட்களுக்கு கிடைக்கும் என்பது தெரியாது. இதுவும் நின்று விட்டால் அவ்வளவு தான்.
மேலும் கட்டுமானங்களுக்கு தற்போது கற்களால் உருவாக்கப்படும் எம்-சாண்ட், பி-சாண்ட் தேவைகளால், ஒரு சில இடங்களில் வெட்டி எடுக்கப்படும் கற்கள் அவற்றுக்கு சென்று விடுவதால், எங்களுக்கு கிடைப்பதில்லை.இவை ஒருபுறமிருக்க, மூலபொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. உதாரணமாக கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பரில் கிலோ ரூ.138-க்கு விற்கப்பட்ட இரும்பு தற்போது ரூ.200-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் அனைத்து மூலப்பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.
இதனால் வெட்கிரைண்டர்களின் விலையையும் நாங்கள் கடந்த 3 மாதங்களில் படிப்படியாக உயர்த்த வேண்டிய கட்டாயம். குறிப்பாக ரூ.3500-க்கு விற்கப்பட்ட வெட்கிரைண்டர் ரூ.4500-க்கு விற்க கொடுக்க வேண்டிய நிலை. அனைத்து ரகங்களின் விலையும் உயர்ந்துள்ளது.
விலை உயர்வால் பொதுமக்களிடம் வாங்கும் திறன் குறையும் என்பதைக் கருத்தில் கொண்டு, வர்த்தகர்களும் எங்களுக்கான ஆர்டர்களைக் குறைத்துள்ளனர். தீபாவளி ஆர்டர் மிகவும் குறைந்துள்ளது. ஆந்திரா, மகாராஷ்டிரா, ஒடிசா, பீகார், மேற்குவங்கம், டெல்லி என பல மாநிலங்களுக்கு கோவையிலிருந்து வெட்கிரைண்டர்கள் செல்கின்றன. கடந்தாண்டுக்கு முன்பு வரை மாதந்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேல் சென்ற வெட்கிரைண்டர்கள் எண்ணிக்கை தற்போது 30 ஆயிரமாக உள்ளது.
கோவையில் மட்டும் வெட்கிரைண்டர் உற்பத்தி சார்ந்து நேரடியாகவும், மறைமுகவாவும் ஒரு லட்சம் குடும்பங்கள் உள்ளன. ஆண்டுக்கு ரூ.600 கோடி வரை வர்த்தகம் நடைபெறும் இத்தொழிலில், தற்போது உற்பத்தியாளர்களுக்கான இழப்பு, தொழிலாளர்களின் வாழ்வாதாரம் என அனைத்தையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு சிறுகனிம சலுகை விதிகளில் திருத்தம் செய்து கல் குவாரி விவகாரத்தில் உரிய தீர்வு காண வேண்டும். இல்லை என்றால் அவர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளது. மூலப்பொருட்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.