August 3, 2017 தண்டோரா குழு
குவாரி முதல் குட்கா வரை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்துள்ள ஊழல்களை, மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், வருமான வரித்துறை அம்பலப்படுத்த வேண்டும் என்று திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுக் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
“சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் 100 ஏக்கர் நிலங்களும், குவாரிகளும் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டு இருக்கின்றன. அமைச்சர் பதவியை தவறாகப் பயன்படுத்தி, குவாரியில் அனுமதிக்கப்பட்டதை விட மூன்று மடங்கு கற்களை வெட்டி எடுத்துள்ளார் என்றும் வருமான வரித்துறை கண்டுபிடித்திருக்கிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது அமைச்சரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட மாமூல் வசூல் பட்டியலில், ஒரு மாத ஊழல் பணம் வசூல் மட்டும் 5.16 கோடி ரூபாய் என்று தெரிய வந்துள்ளது. அமைச்சருக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து ரொக்கமாக வருமான வரித்துறை கைப்பற்றிய பணம் மட்டுமே ஏறக்குறைய 5 கோடி ரூபாய்.
அவரிடமிருந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்ததாக கைப்பற்றப்பட்ட பட்டியலின் மொத்த மதிப்பு ரூபாய் 89 கோடி. தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்த வேட்பு மனுவில், தன் கையில் 7 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருக்கிறது என்று கணக்கு கொடுத்தவருக்கு, ரொக்கமாக 94 கோடி ரூபாய் எப்படிக் கிடைத்தது?
அமைச்சர் விஜயபாஸ்கர் தேர்தல் கமிஷனுக்குக் கொடுத்த வேட்பு மனுக்களில் தெரிவித்துள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு, ‘குவாரி முதல் குட்கா’ வரை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்துள்ள ஊழல்களை, வாக்களித்த மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், வருமான வரித்துறை அம்பலப்படுத்த வேண்டும்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இனிமேலும் வேடிக்கைப் பார்க்காமல், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.”
இவ்வாறு மு.க ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.