March 23, 2017 தண்டோரா குழு
டுராண்டோ எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கூடுதலாக தண்ணீர் பாட்டில் தர மறுக்கப்படுகிறது என்று பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்திலிருந்து ஹௌரா ரயில் நிலையத்திற்கு டூராண்டோ எக்ஸ்பிரஸ் ரயில் செலுத்தப்படுகிறது. இந்த வழித்தடத்தின் பயணம் சுமார் 2௦ மணி நேரம் ஆகும்.
ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா நிறுவனம்(IRCTC) இந்த அறிவுரையை பின்பற்ற மறுக்கிறது என பயணிகள் தெரிவித்தனர்.
டுராண்டோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தலா ஒரு தண்ணீர் பாட்டில் தரப்படுகிறது. பயணிகளின் பயணம் நன்றாக இருக்க இந்திய ரயில்வே அமைச்சகம் பல உறுதிமொழிகள் தந்திருந்தும், பயணிகளின் தேவையறிந்து அதை செயல்படுத்த முடியவில்லை. இதனால் பயணிகள் ரயில்வே அதிகாரிகளுக்கு புகார்கள் அளித்த வண்ணம் உள்ளனர்.
இது குறித்து பயணி ஒருவர் கூறுகையில்,
“மார்ச் 2௦-ம் தேதி என் குடும்பத்தினருடன் நான் ஹௌராவிலிருந்து நாக்பூர் செல்ல டுராண்டோ ரயிலில் பயணம் செய்தேன். ரயில் புறப்பட்டபோது ஒவ்வொருவருக்கும் ஒரு தண்ணீர் பாட்டில் தரப்பட்டது. இரவு 1௦ மணியளவில் கூடுதல் தண்ணீர் பாட்டில் வேண்டும் என்று கேட்டேன். 2௦மணி நேர பயணத்திற்கு ஒரு பாட்டில் தண்ணீர் மட்டுமே வழங்கப்படும் என்று கேட்டரிங் ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும் இது குறித்து அவர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை என்னிடம் காட்டினர்” என்றார்.
மற்றொரு பயணி கூறுகையில்,
“பெங்களூருவிலிருந்து கொல்கத்தா செல்ல டுராண்டோ ரயிலில் பயணம் செய்தேன். ரயில் பெட்டியிலுள்ள இருக்கை மோசமான நிலையில் உள்ளதையும், கழிவறையின் நிலையை கண்டும் வருத்தம் அடைந்தேன். ரயிலின் சேவையை மேம்படுத்த அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன்.” என்றார்.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் பயணிகளிடம் கருத்து தெரிவிக்கக மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.