September 15, 2017 தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் குடிநீர் இணைப்புகளுக்கு கூடுதல் வைப்புதொகை செலுத்த வரும் 27-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி குடிநீர் விநியோக துணை விதிகளின் படி அனைத்து குடிநீர் இணைப்புகளுக்கும் கூடுதல் வைப்புத்தொகை வசூலிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.
கோவை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்படுவதற்கு முன் இருந்த 60 வார்டுகளில் 01.10.2013க்கு முன்னர் வீட்டு உபயோக குடிநீர் இணைப்பு பெற்ற இணைப்புதாரர்கள் கூடுதல் வைப்புத் தொகையாக ரூ.4000 வீட்டு உபயோகமல்லாத முறை இணைப்புதாரர்கள் ரூ7000 செலுத்தப்பட வேண்டும்.
இதற்கான அறிவிப்பு அனைத்து இணைப்புதாரர்களுக்கும் அஞ்சல் வழியாக அனுப்பப்பட்டு 15.09.2017க்கு முன்னர் கூடுதல் வைப்புத்தொகை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் கூடுதல் வைப்புத்தொகை செலுத்த வரும் 27-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
“அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் காலை 9.00 மணிமுதல் மாலை 4.00 மணி வரையிலும் மற்றும் சனிக்கிழமைகளில் மாநகராட்சியின் அனைத்து வரிவசூல்மையங்களிலும் இத்தொகையினை செலுத்தலாம்.
மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்களிலும் எந்த மண்டலத்தைச் சேர்ந்த இணைப்புதாரரும் இத்தொகையினை செலுத்த இயலும்” என கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார்.