June 13, 2022 தண்டோரா குழு
கோவை பேரூர் அருகே உள்ள தீத்திபாளையம் என்ற கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாக குட்டிகள் உட்பட 6 யானைகள் கொண்ட ஒரு யானை கூட்டம் சுற்றி வருகின்றன. குட்டைதோட்டம் அருகில் தாமோதரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள், நேற்று இரவு அந்த யானை கூட்டம் புகுந்துள்ளது.
அப்போது யானைகள் பயிர்களை சேதம் செய்ததோடு, அவரது வீட்டு கதவுளை உடைத்து சேதப்படுத்தியுள்ளது. அங்கிருந்த உணவுப் பொருட்களை சாப்பிட்ட யானைகள், பாத்திரங்களையும் சேதப்படுத்தியுள்ளது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அச்சம் அடைந்தனர்.
இது குறித்து அங்கிருந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். யானையை விரட்ட வனத்துறையினர் வருவதற்கு முன்பாகவே யானைகள் அங்கிருந்து சென்று விட்டன.இந்நிலையில் இரவு முழுவதும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் காட்டுப் பகுதியில் சுற்றித் திரிந்த 6 யானைகள் அதிகாலையில் காளம்பாளையம் பகுதியில் உள்ள மலையடிவார வனப்பகுதிக்கு சென்றன.
இதனிடையே யானைக் கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒரு யானை மட்டும் வழி தவறி விட்டதாகவும், மற்ற ஐந்து யானைகள் வனப் பகுதிக்கு சென்று விட்ட நிலையில் அந்த யானை அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் நின்று விட்டதாகவும் தெரிகிறது.குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் சுற்றி திரியும் யானையை வனத்திற்குள் விரட்ட பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூட்டத்தில் இருந்து பிரிந்து வழிதவறிய யானை ஆக்ரோசமாக சுற்றி வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனிடையே காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு இருந்த நாகராஜ் என்ற வேட்டை தடுப்பு காவலர், யானை தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து நாகராஜை மீட்ட வனத்துறையினர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குடியிருப்பு பகுதியில் மக்கள் நடமாட்டம் இருப்பதால் பகல் நேரத்தில் யானையை விரட்டினால் அசாம்பவிதங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், காட்டு யானையை கண்காணித்து இரவு நேரத்தில் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.