February 20, 2017 தண்டோரா குழு
விசைத்தறி உரிமையாளர்களுக்கான கூலியை ஜவுளி உற்பத்தியாளர்கள் குறைத்து அளிப்பதாகக் கண்டித்தும் முறையான கூலியை அளிக்க வலியுறுத்தியும் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனுவை திங்கட்கிழமை அளித்தார்.
அம்மனுவில், “2014-ம் ஆண்டு ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும், விசைத்தறி உரிமையாளர்களுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி கூலி வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.
பின்னர் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “2014-ம் ஆண்டு நடைபெற்ற பேச்சு வார்த்தையின் அடிப்படையில் புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் அடிப்படையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி வழங்க வேண்டும். ஆனால், தொழில் மந்த நிலையைக் காரணம் காட்டி விசைத்தறி உரிமையாளர்களுக்குத் தரவேண்டிய கூலியைக் குறைத்து வழங்குகின்றனர்.
இது குறித்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு மனு அளித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இரு மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள் என முத்தரப்பு பேச்சு வார்த்தை உடனடியாக நடத்தப்படவேண்டும். குறைக்கப்பட்ட கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு வார காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் விசைத்தறி உரிமையாளர்கள் கால வரையற்ற பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்”
இவ்வாறு பழனிச்சாமி கூறினார்.