June 15, 2017 தண்டோரா குழு
கூவத்தூரில் எம்.எல்.ஏ.,க்களுக்கு பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டது தமிழக சட்டப்பேரவைக்கு அவமானம் என எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;
“கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ விவகாரம் தொடர்பாக இன்றும் கேள்வி எழுப்ப முயற்சி செய்தேன். ஆனால், சபாநாயகர் தனபால் இதற்கும் அனுமதி மறுத்தார்.
நீதிமன்றத்தில் உள்ள வழக்கு குறித்து சட்டப்பேரவையில் பேசலாம். தீர்ப்பு அல்லது நீதிமன்ற செயல்பாடு குறித்து தான் விவாதிக்க கூடாது. வீடியோ குறித்த வழக்கை எடுத்து கொள்வதா அல்லது வேண்டாமா என்பது குறித்து வரும் 16-ம் தேதி தான் நீதிமன்றம் முடிவு செய்யும். இதனால், இந்த விவகாரம் சட்டப்பேரவையில் பேசுவது தவறு கிடையாது.
இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.,க்களும் சட்டப்பேரவையில் உள்ளனர். விவாதம் முடிந்தால், அவர்களும் பதிலளிக்க வாய்ப்பு கிடைக்கும். ஆனாலும் அனுமதி வழங்க சபாநாயகர் மறுத்துவிட்டார். இதற்கு திமுக கண்டனத்தை தெரிவிக்கும் வகையில், வெளிநடப்பு செய்துள்ளோம்.
வீடியோ விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். கூவத்தூரில் பல கோடி பேரம் பேசப்பட்டது தமிழக சட்டப்பேரவைக்கு அவமானம். சட்டப்பேரவையில் இதைப்பற்றி பேசாவிட்டால், மக்கள் எங்களை துப்புவார்கள். இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்.”
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.