October 6, 2017 தண்டோரா குழு
கேரளாவில் தலித்துக்கள் உட்பட பிராமணரல்லாதவர்கள் 36 பேர் குருக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவின் திருவிதாங்கூர் தேவஸ்வம், இந்து ஆலய மதகுரு பணிக்காக,தேர்வான 62 பேரின் பெயர்ப்பட்டியல் கடந்த வியாழன் அன்று வெளியிடப்பட்டது.இதில்,பிற்படுத்தப்பட்ட, தலித் சமூகத்தை சேர்ந்த 36பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசு பணிகளுக்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் கோவில் மதகுரு பணிகளுக்கான தேர்வு நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.
இவர்கள் முறையான நேர்முகத் தேர்வுகள், பரீட்சைகளுக்கு பின் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.
தேர்வு செய்யப்பட்டவர்கள் திருவிதாங்கூர் தேவஸ்வத்தின் கீழ் இயங்கும் ஆலயங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.தலித்துக்கள் உட்பட பிராமணரல்லாதவர்கள் 36 பேர் குருக்களாக நியமிக்கப்பட்டுள்ளது சமூக மாற்றத்திற்கான செயல்பாடாக பார்க்கப்படுகிறது.
பிராமணர் மட்டுமே முக்கிய பொறுப்பில் இருக்க அனுமதிக்கப்படும் சபரிமலை கோவிலின் மதகுருக்கள் நியமிப்பதில் இந்த முடிவின் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதகுருவாக விரும்புவரின் தகுதி சடங்குகள், மரபுகள் குறித்த அறிவை பொறுத்தது, அவருடைய சாதியை பொறுத்தது இல்லை, என உச்ச நீதிமன்றம் ஐந்து ஆண்டுகளுக்கு முன் தீர்ப்பு அளித்தது. இதன் விளைவே திருவிதாங்கூர் தேவஸ்வத்தின் இந்த நடவடிக்கை என்பது குறிபிடத்தக்கது.