September 15, 2021 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் கேரளா மாநில எல்லை பகுதிகளில் உள்ள 13 சோதனைச்சாவடியில் சுகாதாரத்துறை, வருவாய் துறை, காவல்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாலும், நிபா வைரஸ் பரவி வருதாலும்,கேரளா மாநிலத்தின் எல்லைப்பகுதிகளான கோவை மாவட்டத்தின் வாளையார்,முள்ளி, மேல்பாவியூர், வேலந்தபாளையம், வீரப்பகவுண்டனூர், கோபாலபுரம்,மீனாட்சிபுரம், வழுக்குப்பாறை, ஆனைகட்டி உள்ளிட்ட 13 சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறை வருவாய்த்துறை மற்றும் காவல்துறை ஆகிய துறைகளின் அலுவலர்களை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்திற்கு வரும் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்று அல்லது கொரோனா தடுப்பூசி (இரண்டு தவணை) செலுத்தப்பட்டதற்கான சான்று கண்டிப்பாக உடன் வைத்திருக்க கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். அவ்வாறு சான்றிதழ்கள் இல்லாதபட்சத்தில் சோதனைச்aசாவடிகளிலேயே அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.மேலும் உடல் வெப்ப பரிசோதனையும் செய்யப்படுகிறது.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘கோவை – கேரளா எல்லைப்பகுதியில் உள்ள 13 சோதனைச்சாவடிகளிலும் 24 மனி நேரமும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. மேலும் சோதனைச்சாவடிகளுக்கு அருகில் உள்ள கிராமங்களிலும் டெங்கு, நிபா, கொரோனா வைரஸ் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது’’ என்றார்.