May 4, 2017 தண்டோரா குழு
முல்லை பெரியாறு அணையை பராமரிப்பு வழக்கில் கேரளா அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு கேரள அரசு இடையூறு செய்வதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி கே.எஸ். கேகர், நீதிபதிகள் சந்திரசூட், எஸ்.கே.கவூல் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.
அதில் இந்த வழக்கு தொடர்பாக கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தமிழக அரசின் மனு மீதான விசாரணை ஜூலை 2-வது வாரம் நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த உச்ச நீதிமன்றம் 2014-ம் ஆண்டு உத்தரவிட்டது. அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அந்த முயற்சிக்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.