• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேரள முதலமைச்சரை தமிழக முதல்வர் சந்திக்க வேண்டும்

January 18, 2017 தண்டோரா குழு

பவானி ஆற்றில் தடுப்பணை கட்டுவதைத் தடுக்க கேரள முதலமைச்சரைத் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்திக்க வேண்டும் என்று தி.மு.க. செயல்தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை என்னும் இடத்தில் கேரள அரசு தடுப்பணை கட்ட முயற்சிகள் மேற்கொண்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவைக்கும், இந்த மாவட்டங்களின் விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாகத் திகழ்கிறது பவானி ஆறு. அந்த ஆற்றிலிருந்து தமிழகத்திற்குக் கிடைக்கும் தண்ணீரைத் தடுக்கும் கேரள அரசின் இந்த முயற்சி தமிழக மக்களையும், விவசாயிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஏற்கனவே 2002 ஆம் வருடம் இதே போன்றதொரு முயற்சியை கேரள அரசு மேற்கொண்டது. ஆனால், அப்போது திமுக தலைவர் கலைஞர் அவர்களின் உத்தரவின்பேரில் அன்றைக்கு சுற்றுப்புறச் சூழல் அமைச்சராக இருந்த டி.ஆர். பாலு எடுத்த சீரிய நடவடிக்கையின் காரணமாக கேரள அரசின் அணை கட்டும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.

15 வருடங்கள் அமைதி காத்து விட்டு இப்போது திடீரென்று மீண்டும் அட்டப்பாடி பள்ளத்தாக்குப் பகுதியில் தேக்குவட்டை, மஞ்சகண்டி ஆகிய இரு இடங்களில் கேரள அரசு தடுப்பணைகளைக் கட்டுவதற்காக மணல், ஜல்லிகளைக் கொட்டி, முதற்கட்ட பணியில் ஈடுபட்டிருப்பதாக வரும் செய்திகள் கவலையளிக்கிறது. இதுவரை அதிமுக அரசின் சார்பில் கேரள அரசின் முயற்சிகளை கண்டிக்கவும் இல்லை. கேரள அரசுடன் உடனடியாகப் பேசி இப்பணிகளை தடுத்து நிறுத்த முன் வரவும் இல்லை.

அந்த மாவட்டங்களில் உள்ள விவசாயிகளும் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்கள். தமிழகத்திற்குப் பவானி ஆற்றுத் தண்ணீரின் முக்கியத்துவம் கருதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தி.மு.க. சொத்துப் பாதுகாப்புக் குழுத் துணை தலைவர் பொங்கலூர் பழனிசாமி அக்கூட்டத்தில் பங்கேற்றார்.

இதற்கிடையில் இப்போது தொடங்கப்பட்டுள்ள 2 தடுப்பணைகள் தவிர மேலும் நான்கு புதிய தடுப்பணைகளை பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அப்படி ஆறு தடுப்பணைகள் கட்டப்பட்டால் தமிழகத்தில் உள்ள மூன்று மாவட்டங்களின் விவசாயம் மோசமாக பாதிக்கப்படும்.

பவானிசாகர் உள்ளிட்ட அணைகளுக்கு கிடைக்கும் தண்ணீரின் அளவு அறவே குறைந்து போகும். ஏற்கனவே, காவிரி டெல்டா பகுதிக்கு காவிரி நீர் கிடைக்காததால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இது போன்ற தருணத்தில் கேரள அரசும் தமிழக விவசாயிகளை வஞ்சிக்க முயற்சிப்பது கடும் வேதனைக்குரியது மட்டுமல்ல, மிகுந்த கவலையளிப்பதாகவும் இருக்கிறது.

ஆகவே, இரு மாநில மக்களிடையே நிலவும் நல்லுறவை பாதிக்கும் வகையில் பவானி ஆற்றின் குறுக்கே ஆறு தடுப்பணைகள் கட்டும் எந்த ஒரு முயற்சியையும் கேரள அரசு மேற்கொள்ளக் கூடாது என்றும், முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் உடனடியாக கேரள முதல்வர் பினராய் விஜயன் அவர்களை சந்தித்து, பவானி ஆற்றில் தடுப்பணை கட்டுவதால் தமிழக மக்களுக்கு ஏற்படும் குடிநீர் பிரச்சினைகளையும், விவசாயிகளுக்கு ஏற்படும் இன்னல்களையும் விளக்கிக் கூறி, கேரள அரசின் “ஆறு தடுப்பணைகள்” கட்டும் முடிவை கைவிட வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் படிக்க