February 8, 2023 தண்டோரா குழு
கோவையில் நடைபெற்ற கே.சி.டபிள்யூ.2023 கோப்பைக்கான கூடைப்பந்து போட்டியில் தூத்துக்குடி ஹோலி க்ராஸ் பள்ளி வென்று கோப்பையை கைப்பற்றியது.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள கிருஷ்ணம்மாள் கல்லூரியின் வைர விழாவை முன்னிட்டு கே.சி.டபிள்யூ. கோப்பை ,எனும் பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி கிருஷ்ணம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கடந்த 6 ந்தேதி துவங்கி நடைபெற்ற இதில்,சென்னை கோவை, மதுரை, திருச்சி,தூத்துக்குடி என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.
கே.சி. டபிள்யூ. டிராபி – 2023″ கோப்பைக்கான இந்தப் போட்டிகள் லீக் முறைப்படி நடைபெற்றன. இதில் அதிக புள்ளிகளை பெற்று தூத்துக்குடி ஹோலி க்ராஸ் பள்ளி கோப்பையை தட்டி சென்றது.இந்நிலையில் போட்டி இறுதிநாளான இன்று பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஜி.ஆர்.ஜி.குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற இதில், சிறப்பு விருந்தினர்களாக, கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன், சி.ஆர்.ஐ.நிறுவனங்களின் துணை நிர்வாக இயக்குனர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு,ரொக்க பரிசாக இருபதாயிரம் ரூபாய் மற்றும், கோப்பை சான்றிதழ் பதக்கம் வழங்கி கவுரவித்தனர்.
இதே போல,இரண்டாம் இடம் பெற்ற அணிக்கு 15,000 ரூபாய் மூன்றாம் இடம் பிடித்த அணியினருக்கு பத்தாயிரம் ரூபாய்,நான்காம் இடம் பிடித்த அணிக்கு ஐந்தாயிரம் மற்றும் சான்றிதழ்,பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதே போல,சிறப்பாக விளையாடிய மாணவிகளுக்கும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில், கே.சி.டபிள்யூ.கல்லூரியின் தலைவர் நந்தினி,செயலர் யசோதா,முதல்வர் மீனா,விளையாட்டு இயக்குனர் ஜெயசித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.