April 28, 2016 தண்டோரா குழு.
கிரிக்கெட் உலகில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தற்போது உலக புகழ் மற்றும் பணக்கார விளையாட்டு வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார்.
சமீபத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து பேசுவதற்காக ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் சிறு வயதில் ஆட்டோவில் செல்ல பணம் இல்லாமல் தவித்த சம்பவத்தைப் பற்றி சச்சின் நினைவு கூர்ந்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் தனது 12-வது வயதில் மும்பை 15 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் அணியில் விளையாடத் தேர்வானார். 3 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட அத்தொடரில் விளையாடுவதற்காக மும்பையில் இருந்து புனே சென்றுள்ளார். அத்தொடரின் பெரும்பாலான நேரம் மழையால் பாதிக்கப்பட்டது. ஒரே ஒரு முறை மட்டும் பேட் செய்த அவர் வெறும் 4 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
இதன்பிறகு தொடரின் மிச்ச நேரத்தை வெளியில் செல்வது, சினிமா பார்ப்பது என்று பொழுதை களித்த சச்சின், புனேவிலிருந்து மும்பையின் தாதர் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். பின்னர் தான் தெரிந்துள்ளது தனது பாக்கெட்டில் ஒரு பைசா கூட இல்லை என்பது. அந்தளவிற்குத் தான் அங்கு அதிகமாக செலவளித்ததை நினைத்து அப்போது கவலையடைந்துள்ளார். இதையடுத்து பணம் இல்லாமல் தவித்த சச்சின் தாதர் ரயில் நிலையத்திலிருந்து சிவாஜி பார்க்கில் இருந்த தனது வீட்டிற்கு நடந்து சென்றதாக சச்சின் தெரிவித்தார். மேலும் தற்போதுள்ள தொழில்நுட்ப வசதியான செல் போன் இருந்திருந்தால் அப்போதே என் வீட்டிற்குத் தகவல் கொடுத்து ஆட்டோவில் சென்றிருப்பேன் அல்லது வீட்டிலிருந்து யாராவது வந்திருப்பார்கள் எனத் தெரிவித்தார்.