March 16, 2022 தண்டோரா குழு
கொங்கு நாட்டு விடுதலை வீரர்களின் வரலாற்றை தொகுக்க வேண்டும் என்று பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் காளிராஜ் வலியுறுத்தியுள்ளார்.
தென்னிந்திய மொழிகளின் நாட்டுப்புறவியல் கழக மாநாடு கடந்த 14 மற்றும் 15ம் தேதி
இணையவழியில் பாரதியார் பல்கலைக்கழக தமிழ்த்துறை சார்பில் நடைபெற்றது. இதில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, உத்திரப்பிரதேசம், ஒரிசா, மத்தியப் பிரதோம், மகாராஷ்டிரா, புதுச்சேரி போன்ற பல்வேறு மாநிலங்களை சோந்த அறிஞர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் துவக்கவுரையாற்றி மாநாட்டை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் துவக்கி வைத்தார்.
இதில் அவர் பேசுகையில்,
‘‘இந்த ஆண்டு தென்னிந்திய மொழிகளின் நாட்டுப்புறவியல்கழகமும், தமிழ்த்துறையும் இணைந்து பல்வேறு ஆய்வுக் களங்களில் மாநாடுகள் நடத்துவது சமூகத்திற்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும். மேலும் இதனை அடிப்படையாகக் கொண்டு கொங்கு மண்ணில் விடுதலைக்கு போராடிய வீரர்களின் வாழ்வின் வரலாற்றை தொகுக்க வேண்டும்,’’ என்றார்.
இந்த இரண்டு நாட்களில் ஆறு அமர்வுகளில் 26 ஆய்வறிஞர்கள் தங்கள் ஆய்வு சாரத்தை வெளிப்படுத்தினார்கள். இருளர் இன மக்களின் கதைப்பாடல் அமைப்பு,தமிழ் இலக்கியத்தில் உயிரியல், இடுக்கி மாவட்ட இறுதிச்சடங்கு முறைகள், ஒடிசா கலைகளில் சாவ் நடனம், துளு கலாச்சாரத்தில் தரோலி மரம் போன்ற ஆய்வு கருத்துக்கள் சிந்தனையைத் தூண்டும் வண்ணம் அமைந்தன.
இந்த மாநாட்டில் தென்னிந்திய மொழிகளின் நாட்டுப்புறவியல் கழகத் தலைவர் பக்தவத்சல ரெட்டி, தமிழ்த்துறை தலைவர் சித்ரா, துறைப் பேராசிரியர்கள் தங்கமணி, ஆனந்தவேல், இளையராஜா, கோகுல் கிருஷ்ணன் மற்றும் நாட்டுப்புறவியல் அறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.