December 31, 2016 தண்டோரா குழு
திருநங்கைகளுக்கான இந்தியாவில் முதல் சர்வதேசப் பள்ளியைத் திருநங்கை ஆர்வலரும் கலைஞருமான கல்கி சுப்பிரமணியம் கொச்சியில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 3௦) திறந்து வைத்தார்.
தேசிய திறந்த பள்ளி அமைப்பின் கீழ் சஹாஜ் சர்வதேச பள்ளி 1௦ திருநங்கை மாணவர்களுடன் செயல்படும். பள்ளிக்கு செல்ல முடியாத அவர்களுக்கு இது மாற்று கல்வி நிலையமாக அமையும். இப்பள்ளியில் மாணவர்கள் தங்கும் விடுதியும், அவர்களுக்கு மென்மையான திறன் பயிற்சி மற்றும் கரிம வேளாண்மை பயிற்சியும் கொடுக்கப்படும்.
இங்கு படிக்க வரும் மாணவர்கள் பல்வேறு திருநங்கை சமுகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். “ட்ரான்ஸ் இந்தியா பவுண்டேஷன்” அமைப்புடன் இணைந்து பணிபுரியும் ஆறு திருநங்கைகளின் கீழ் இந்த கல்வி நிறுவனம் செயல்ப்படும்.
இந்த சர்வதேசப் பள்ளியின் திறப்பு விழாவில், ட்ரான்ஸ் இந்தியா பவுண்டேஷன் அலுவலக நிர்வாகிகள் மாயா மோகன், விஜயராஜ் கலந்துகொண்டனர். கேரள சட்டப்பேரவை உறுப்பினர் பி.டி. தாமஸ் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் முஹம்மத் சபீறுல்லா ஆகியோரும் கலந்துகொண்டனர்.