November 8, 2017 தண்டோரா குழு
ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடிக்கப்பட்டது மற்றும் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஓம் பகதூர், மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூரைத் தாக்கிய மர்ம கும்பல், எஸ்டேட்டில் உள்ள பங்களாவுக்குள் புகுந்த தங்கம், வைர நகைகள், பணம் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்ட பல முக்கிய பொருட்களை கொள்ளையடித்து சென்றது.
இதைதொடர்ந்து காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில் ஜெயலலிதாவின் கார் டிரைவராக பணிபுரிந்த கனகராஜ் இந்த கொள்ளையில் மூளையாக செயல்பட்டதும், கேரளாவை சேர்ந்த கூலிப்படை மூலம் கொள்ளை திட்டத்தை அரங்கேற்றியதும் தெரியவந்தது. இதையடுத்து கனகராஜை போலீசார் தேடிய நிலையில் அவர் சேலம் அருகே விபத்தில் பலியானார்.
அவரது கூட்டாளியான கோவையை சேர்ந்த சயன் பாலக்காடு அருகே கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். எனினும், அவர் உடல்நலம் தேறினார்.இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேரில் 5 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய நீலகிரி மாவட்ட ஆட்சியர் திவ்யா உத்தரவிட்டார்.பின்னர், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட கேரளாவை சேர்ந்த சதீசன், தீபு, குட்டி பிஜின், உதயகுமார், மனோஜ் ஆகிய 5 பேர் மீது கடந்த ஜூலை 19 குண்டர் சட்டம் பாய்ந்தது.
இந்நிலையில் அவர்களது உறவினர்கள் கொண்டு வந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையி்ன் போது, மேற்கண்ட 5 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.