November 27, 2021 தண்டோரா குழு
கோவையில் கொரோனா இறப்பிற்கான மருத்துவ சான்று பெறுவதில் ஏற்படும் சிக்கலை கையாள குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
பொதுவாக இறப்பு சான்றிதழ்களில் இறப்பிற்கான காரணம் குறிப்பிடப்படுவதில்லை. ஆனால், கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்புகளுக்கு நிவாரண தொகை மற்றும் பல சலுகைகள் பெற இறப்பின் காரணம் அவசியமாகிறது. எனவே, இறப்பின் காரணத்தை அறிய மருத்துவமனைகளில் நிகழும் இறப்புகளுக்கு படிவம் 4ம், வீடுகளில் நிகழும் இறப்பிற்கான காரணத்திற்கான சான்றும் வழங்கப்படுகிறது.
இந்த இறப்பின் காரணத்திற்கான சான்றை பிறப்பு, இறப்பு பதிவாளர்களிடம் சம்பந்தப்பட்ட நபர்கள் பெற்றுக் கொள்ளலாம். இந்த இறப்பிற்கான மருத்துவ சான்றிதழ் கிடைக்க பெறாதவர்கள் மற்றும் கொரோனா இறப்பிற்கான காரணத்தில் திருப்தி இல்லாதவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் உரிய ஆவணங்களுடன் மனு அளிக்கலாம்.
இதற்காக, மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட பிறப்பு, இறப்பு – பதிவாளர் தலைமையில், மாநகராட்சி கமிஷனர், இணை இயக்குனர் சுகாதார பணிகள், மருத்துவ கல்லூரி முதல்வர், துணை இயக்குனர் சுகாதார பணிகள் மற்றும் மாவட்ட தொற்று நோயியல் நிபுணர் ஆகியோர் அடங்கிய கொரோனா இறப்பினை உறுதி செய்யும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதன்மூலம், பெறப்படும் மனுக்களை இக்குழு பரிசீலனை செய்து தகுதி வாய்ந்த நபர்களுக்கு உரிய படிவத்தில் இறப்பின் காரணத்திற்குரிய சான்று வழங்கப்படும். எனவே, கொரோனா தொற்றினால் இறந்த யாருக்கேனும் இறப்பின் காரணத்திற்கான சான்று கிடைக்கவில்லை என்றால், இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.