April 1, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:
கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் இதுவரை 5,624 மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. இதில் 3,778 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தலா ரூ.50 ஆயிரம் வீதம் நிவாரண தொகை வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் 1,187 மனுக்கள் இருமுறை பெறப்பட்டது உள்ளிட்ட சில காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி கடந்த 20-ந் தேதிக்கு முன் ஏற்பட்ட கொரோனா தொற்றினால் ஏற்பட்ட இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் வருகிற 18.5.22-க்குள் தங்களது மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இறப்பு நிகழ்ந்த 90 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். மேற்குறிப்பிட்ட தேதிக்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் அது குறித்து கோவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.